புதுடெல்லி: தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் சிக்கியிருந்த 47 இந்தியர்களை அங்குள்ள இந்தியத் தூதரகம் பாதுகாப்பாக மீட்டுள்ளது.
அந்நாட்டின் போக்கியோ மாவட்டத்தில் செயல்பட்டு வந்த இணைய மோசடி நிலையங்களில் அவர்கள் சிக்கித் தவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இவ்வாண்டில் மட்டும் லாவோசிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 635 ஆனது.
இந்நிலையில், போலி வேலைவாய்ப்புகளை நம்பி, அத்தகைய மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று இந்திய அதிகாரிகள் தம் நாட்டுக் குடிமக்களை எச்சரித்துள்ளனர்.
லாவோசின் தங்க முக்கோண சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கைகளை முறியடித்து, அங்குச் சிக்கியிருந்த 29 இந்தியர்களை லாவோஸ் அதிகாரிகள் தன்னிடம் ஒப்படைத்ததாக அங்குள்ள இந்தியத் தூதரகம் எக்ஸ் ஊடகம் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
எஞ்சிய 18 பேரும் தூதரகத்திடம் நேரடியாக உதவி கோரி, அதன்பின்னர் மீட்கப்பட்டவர்கள்.
அதனைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட இந்தியர்களைச் சந்தித்த லாவோசிற்கான இந்தியத் தூதர் பிரசாந்த் அகர்வால், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.
மீட்கப்பட்ட 47 பேரில் 30 பேர் இந்தியா திரும்பிவிட்டதாகவும் எஞ்சிய 17 பேரும் விரைவில் தாய்நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
அண்மையில் லாவோஸ் சென்றிருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்தியர்கள் கடத்தப்படுவது குறித்து அந்நாட்டுப் பிரதமர் சோன்ஸே சிஃபண்டோனுடன் பேசினார்.
கடந்த மாதமும் லாவோசின் இணைய மோசடி நிலையங்களில் மாட்டிக்கொண்ட 13 இந்தியர்கள் மீட்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.