பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் வால்னூர் தியாகத்தூர் கிராமத்தில் ரயில்வே இரும்புத் தடுப்பில் சிக்கிக்கொண்ட காட்டு யானை ஒன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய அந்தக் காட்டு யானை, காப்பித் தோட்டத்தை நோக்கிச் சென்றதாகத் தெரிகிறது.
செல்லும் வழியில், ரயில் தண்டவாளத்தின் அருகே அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்பின்கீழே நுழைந்து கடக்க முயன்றபோது யானை அதில் சிக்கிக்கொண்டது.
அதிலிருந்து விடுபட முடியாமல் இரவு முழுவதும் அந்தக் காட்டு யானை பிளிறியதாக ஊடகங்கள் குறிப்பிட்டன.
மறுநாள் காலை அந்த வழியாகச் சென்றவர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் காட்டு யானையைப் பாதுகாப்பாக மீட்டு, மீண்டும் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.
வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள அந்தக் கிராமத்திற்குள் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் அவ்வப்போது புகுந்து கால்நடைகளைத் தாக்குவதாகவும் விவசாய நிலங்களை நாசப்படுத்துவதாகவும் கூறப்பட்டது.