புதுடெல்லி: இந்தியாவில் பக்ரா, பியாஸ் நதிகள் தொடர்பான 60 ஆண்டுகால சர்ச்சைக்கு உச்ச நீதிமன்றம் முடிவு கண்டுள்ளது. பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கு இடையே 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அந்த மூன்று மாநிலங்களுக்கு இடையே நீர்மின் பங்கீடு தொடர்பில் நிலவிய சர்ச்சை, நாட்டின் மிகப் பழமையான, மிகவும் சிக்கலான சர்ச்சைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பஞ்சாபின் சட்லஜ் நதியின் குறுக்கே பக்ரா-நங்கல் நீர்மின் திட்டம் 1944ல் முன்மொழியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அதே மாநிலத்தின் மற்றொரு நதியான பியாஸின் குறுக்கே தேஹர், பொங் அணைத் திட்டங்கள் வகுக்கப்பட்டன.
1966ஆம் ஆண்டில் ‘பஞ்சாப் மறுசீரமைப்புச் சட்டம்’ நடைமுறைக்கு வந்ததன் மூலம், ஒருங்கிணைந்த பஞ்சாப் மாநிலம் பிரிக்கப்பட்டு பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. சண்டிகர், யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதுடன் இமாச்சலப் பிரதேசத்தின் எல்லைக்குள் ஒரு பெரிய பகுதி சேர்க்கப்பட்டது.
மறுசீரமைப்புச் சட்டத்தின் 78வது பிரிவின்கீழ், பக்ரா-நங்கல், பியாஸ் திட்டங்கள் தொடர்பான உரிமைகளையும் பொறுப்புகளையும் பகிர்ந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டது.
இந்த அணைகளின் திட்டத்திற்காகத் தனது நிலத்தையும் வளங்களையும் இமாச்சலப் பிரதேசம் அளித்திருந்தது. இதன் காரணமாக, அப்போதிருந்தே இத்திட்டத்தின் மீதான உரிமையைத் தனக்குச் சொந்தமானது என்று அது கோரி வந்தது. ஆனால், மற்ற இரு மாநிலங்களும் இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை.
இதை எதிர்த்து இமாச்சலப் பிரதேசம், இந்திய அரசியலமைப்பின் 131வது பிரிவின்கீழ், 1996ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. இவ்வழக்கில் 2011 செப்டம்பர் 27ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் இமாச்சலப் பிரதேசத்திற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது.
இதன்படி, பிரிக்கப்படாத பஞ்சாபின் மின்சாரத்தில் 7.19 விழுக்காட்டுப் பங்கினை இமாச்சலப் பிரதேசம் பெறவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்தத் தீர்ப்பின்படி, இமாச்சலப் பிரதேசம் தனது மின்சாரப் பங்கினைப் பெறத் தொடங்கிய போதிலும், 1966 முதல் 2011 அக்டோபர் வரையிலான நிலுவைப் பங்கினைப் பெறவில்லை. இதற்கான தனது உரிமையை இமாச்சலப் பிரதேசம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்தச் சூழலில் மூன்று மாநிலங்களுக்கு இடையிலான இப்பிரச்சினைக்கு தற்போது உச்ச நீதிமன்றம் தீர்வு கண்டுள்ளது. தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையில், நீதிபதி ஜாய்மால்யா பாக்சி, நீதிபதி வி. மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கியத் தீர்ப்பை வழங்கியது.
இதன்படி, பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் இணைந்து, அடுத்த 20 ஆண்டுகளுக்கு இமாச்சலப் பிரதேசத்திற்கு மொத்தம் 11,973 மில்லியன் யூனிட் மின்சாரத்தை வழங்க வேண்டும். இது பணமாக அல்லாமல், மின்சாரமாகவே வழங்கப்படும்.
மத்திய மின்சார ஆணையத்தின்படி, இமாச்சலப் பிரதேசத்திற்கு வழங்க வேண்டிய மொத்த மின்சார அளவு 13,066 மில்லியன் யூனிட்டுகள். இதில், பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள் அணைக் கட்டுமானத்தின்போது மூலதனச் செலவுகளுக்காகவும் கடன் சேவைக்காகவும் செலவிட்ட ரூ.420.77 கோடி தொகை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் பஞ்சாபின் பங்கு ரூ.249.23 கோடியாகவும், ஹரியானாவின் பங்கு ரூ.171.55 கோடியாகவும் மதிப்பிடப்பட்டது. இந்தச் சரிசெய்தலுக்குப் பிறகு, இமாச்சலப் பிரதேசத்திற்கு வழங்க வேண்டிய மின்சார அளவு 11,973 மில்லியன் யூனிட்டுகளாகக் குறைக்கப்பட்டது. தலைமைச் சட்ட அதிகாரி ஆர். வெங்கடரமணி முன்னிலையில், மூன்று மாநிலங்களுடனும் நடத்தப்பட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு இந்தச் சமரசத் திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
