புதுடெல்லி: உணவகங்கள் தங்களின் உணவுக் கட்டண ரசீதில் கூடுதலாக ‘எல்பிஜி கட்டணம்’, ‘எரிவாயுக் கூடுதல் கட்டணம்’ அல்லது ‘எரிபொருள் செலவு மீட்பு’ போன்ற பெயர்களில் கூடுதல் தொகையை வசூலிக்கக் கூடாது என இந்தியப் பயனீட்டாளர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
உணவுப் பட்டியலில் குறிப்பிட்டுள்ள விலையைத் தவிர்த்து, எரிவாயு விலையேற்றத்தைக் காரணம் காட்டி வாடிக்கையாளர்களுக்கு உணவு உண்டதற்காக வழங்கப்படும் ரசீதில் கூடுதல் கட்டணம் சேர்ப்பது பயனீட்டாளர்ப் பாதுகாப்புச் சட்டத்தின்படி தவறான வர்த்தக நடைமுறையாகக் கருதப்படும் என ஆணையம் தெரிவித்துள்ளது.
உணவைச் சமைப்பதற்குத் தேவைப்படும் திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி), மின்சாரம், இதர செலவுகள் அனைத்தும் உணவின் விலையிலேயே சேர்க்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் பொருட்சேவை வரி (ஜிஎஸ்டி) போன்ற அரசு வரிகளைத் தவிர்த்து வேறு எந்தக் கூடுதல் கட்டணத்தையும் வாடிக்கையாளர்கள்மீது திணிக்கக் கூடாது என்றும் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.
மத்திய கிழக்குப் போர் காரணமாகக் கச்சா எண்ணெய், எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ள சூழலில், பெங்களூரு, புதுடெல்லி, சென்னை போன்ற நகரங்களில் உள்ள உணவகங்கள் 5 விழுக்காடு முதல் 10 விழுக்காடு வரை ‘எரிவாயுக் கூடுதல் கட்டணம்’ வசூலிப்பதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

