புதுடெல்லி: லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘ராய்ட்டர்ஸ்’ அனைத்துலக செய்தி நிறுவனத்தின் ‘எக்ஸ்’ சமூக ஊடகக் கணக்கை இந்திய அரசு ஜூலை 5ஆம் தேதி முடக்கியதாகக் கூறப்பட்டது.
அந்நிறுவனத்தின் கணக்கை முடக்கும்படி நாங்கள் ‘எக்ஸ்’ நிறுவனத்திடம் கேட்கவில்லை என்றும் தொழில்நுட்பக் கோளாறால் அது நடந்திருக்கலாம் என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், இது குறித்து ‘எக்ஸ்’ நிறுவனத்திடம் விளக்கம் கேட்டுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
“அப்பிரச்சினை விரைவில் சரிசெய்யப்படும். அது தொடர்பாக அந்நிறுவனத்தின் அதிகாரிகளுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்,” என அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட, ‘ஆப்பரேஷன் சிந்துார்’ நடவடிக்கையின்போது, ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட செய்தி நிறுவனங்களின் கணக்கை முடக்கும்படி, எக்ஸ் நிறுவனத்திற்கு இந்திய அரசு உத்தரவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதனையேற்று பல நிறுவனங்களின் கணக்கை ‘எக்ஸ்’ நிறுவனம் முடக்கிய நிலையில், ‘ராய்ட்டர்ஸ்’ கணக்கு முடக்கப்படவில்லை எனவும் சொல்லப்பட்டது.