16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு

2 mins read
959a3da5-6e09-40a6-9424-ce1dd5244f92
ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா, டெல்லி, ஒடிசா, மிசோரம், சிக்கிம், மணிப்பூர், உத்தரகாண்ட், மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட 16 மாநிலங்களில் மூன்றாம் கட்ட வாக்காளர் பட்டியல் சீரமைப்புப் பணி இடம்பெற உள்ளது. - படம்: டெக்கான் ஹெரால்ட்

புதுடெல்லி: இந்தியாவின் 16 மாநிலங்கள், மூன்று யூனியன் பிரதேசங்களில் மூன்றாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியை (எஸ்ஐஆர்) இந்தியத் தேர்தல் ஆணையம் மே 30ஆம் தேதி தொடங்க உள்ளது.

ஏற்கெனவே பீகார், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் முதலாம், இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தற்போது அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

பருவநிலை, நிர்வாகக் காரணங்களால் இமாச்சலப் பிரதேசம், ஜம்மு - காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகளுக்கு மட்டும் இந்தப் பணிகளில் இருந்து தற்காலிகமாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அங்கு மக்கள்தொகை கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டம் முடிந்த பிறகு இப்பணிகள் தொடங்கும்.

ஏறக்குறைய 394,000 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் ஏறக்குறைய 36.73 கோடி வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று ஆவணங்களைச் சரிபார்ப்பர்.

தற்போது நடைபெற்று வரும் தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளுடன் இணைத்தே இந்தத் திருத்தப் பணிகளும் மேற்கொள்ளப்படுவதால், களப் பணியாளர்களை மிகவும் திறம்பட பயன்படுத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

மூன்றாம் கட்டப் பட்டியலில் இடம்பெற்றுள்ள, டெல்லியில் திருத்தப்பட்ட இறுதிக்கட்ட வாக்காளர் பட்டியல் அக்டோபர் 7ஆம் தேதி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதல், இரண்டாம் கட்டத் திருத்தப் பணிகளில் தமிழகம் உட்பட ஒன்பது மாநிலங்கள், புதுச்சேரி உட்பட மூன்று யூனியன் பிரதேசங்களில் ஆயிரக்கணக்கான போலி, தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 2.04 கோடி வாக்காளர்களும் அடுத்தபடியாக மேற்குவங்கத்தில் 83.86 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்பட்டனர்.

இத்தகைய சீரமைப்புப் பணிகளுக்குப் பின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் குறிப்பிடத்தக்க ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்