தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.3 லட்சம் வரை விலைபோகும் சேவல்கள்

1 mins read
29b8b456-f53f-4ae5-80c9-07de665c2c73
சேவல்கள் ஒவ்வொன்றும் ரூ.30,000 முதல் ரூ.3 லட்சம் வரை விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.  - படம்: இந்திய ஊடகம்

கோதாவரி: பொங்கல் பண்டிகைக்காக ஆந்திர மாநிலத்தில் பந்தய சேவல்களின் விற்பனை தொடங்கி உள்ளது. சேவல்களின் விற்பனை இணையத்திலும் நடக்கிறது.

சேவல்கள் ஒவ்வொன்றும் ரூ.30,000 முதல் ரூ.3 லட்சம் வரை விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

ஆந்திராவில் பொங்கல் பண்டிகையின்போது தொடர்ந்து 3 அல்லது 4 நாள்களுக்கு கோதாவரி மாவட்டங்களில் சேவல் பந்தயங்கள் களை கட்டுவது வழக்கம். அதனால் இப்போதே சேவல் விற்பனை தொடங்கிவிட்டது.

வெளிநாடுவாழ் இந்தியர்களும் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் இணையம் வழி சேவல்களை வாங்கத் தொடங்கி விட்டனர்.

இதற்காகவே கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் பல பந்தய சேவல் பண்ணைகள் உருவாகி உள்ளன. இந்தச் சேவல்களைக் காணொளி அழைப்பு மூலம் பார்த்து வாங்குபவர்களும் அதிகரித்து வருகின்றனர்.

சேவல் பந்தயத்திற்காக கோதாவரி மாவட்டங்களில் தற்போது சுமார் 400 சேவல் பண்ணைகள் உருவாகி உள்ளன. ஒரு பந்தயச் சேவலை வளர்ப்பதற்கு ரூ.30,000 வரை செலவாகிறது என கூறப்படுகிறது.

பொங்கல் பண்டிகையின் போது சேவல் பந்தயங்கள் வரும் ஆண்டில் கோதாவரி மாவட்டங்களில் மட்டும் ரூ.500 கோடி வரை நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை இதற்கு தடை விதித்தாலும் சேவல் பந்தயங்களைத் தொடங்கி வைப்பதே எம்.பி. அல்லது எம்எல்ஏவாக இருப்பதால் காவல்துறை இதற்கு பாதுகாப்பு கொடுக்கும் நிலை இப்போதும் தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்