அகமதாபாத்: அமெரிக்காவில் 16 ஆண்டுகளாகச் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த குஜராத் மாநிலத் தொழிலதிபர் ஒருவருக்கு அந்நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை 1.8 மில்லியன் டாலர் (S$2.29 மில்லியன், ரூ.15 கோடி) அபராதம் விதித்துள்ளது.
வெளியேற்ற உத்தரவை மீறித் தங்கியிருந்தமைக்காக அவருக்குப் பெருந்தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ எல்லை வழியாக 2010ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குள் நுழைந்த அவர், அங்குப் பிடிபட்டு, சில வாரங்களிலேயே விடுவிக்கப்பட்டார். எனினும், அடுத்த ஆண்டே அவர் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது.
ஆனால், அவர் குடிநுழைவுத் துறையிடம் முன்னிலையாகாமல் தலைமறைவாக இருந்து, அமெரிக்காவிலேயே தொழில்களைத் தொடங்கி வாழ்ந்து வந்தார். பின்னர் தம் மனைவி, பிள்ளைகளையும் அதே வழியில் அமெரிக்காவிற்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், ஈராண்டுகளுக்கு முன்பு குறிப்பிட்ட குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ‘யு-விசா’ முறைக்கு அவர் விண்ணப்பித்தார். அதன்மூலம் தற்போது வேலை அனுமதி அட்டையையும் சமூக பாதுகாப்பு எண்ணையும் பெற்றுள்ளார்.
இருப்பினும், பல ஆண்டுகளாக வெளியேற்ற உத்தரவை மதிக்காமல் தங்கியிருந்ததற்காக அவருக்குப் பெருந்தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் அவர் தங்கியிருந்த ஒவ்வொரு நாளுக்கும் தலா 998 டாலர் (கிட்டத்தட்ட ரூ.94,000) என்ற விகிதத்தில் கணக்கிடப்பட்டு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அவருக்கு 15 நாள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்கா சென்றவர்களுக்கு இது போன்ற வெளியேற்ற உத்தரவு வழங்கப்படுவது வழக்கந்தான். ஆயினும், இந்தியர் ஒருவருக்கு இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, அபராதம் விதிக்கப்பட்ட தொழிலதிபர் தற்போது சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

