உள்நாட்டு கண்டுபிடிப்புகளால் ரூ.2.64 லட்சம் கோடி சேமிப்பு

1 mins read
fd1e2ea2-72bb-429c-92c6-2fcde4d8f635
இந்தியாவின் இத்திறனை மேம்படுத்துவதில் டிஆர்டிஓவின் சாதனை தொடரும் என்று நம்புவதாக மத்திய அரசு கூறியது. - படம்: இந்தியா டுடே

புதுடெல்லி: அடுத்த தலைமுறைக்கான ஹைபர்சோனிக் தொழில்நுட்பங்கள், ஏவுகணைகளை உருவாக்குவதில் தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) முக்கிய மைல்கல்லை அடைந்துள்ளதாக இந்திய அரசு பாராட்டியுள்ளது.

இந்த நிறுவனம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏறக்குறைய 2.64 லட்சம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஹைபர்சோனிக் தொழில்நுட்பப் பயன்பாட்டில் ‘டிஆர்டிஓ’ முக்கிய மைல்கல்லை அடைந்துள்ள நிலையில், இந்தியாவின் இத்திறனை மேம்படுத்துவதில் டிஆர்டிஓவின் சாதனை தொடரும் என்று நம்புவதாக மத்திய அரசு கூறியது.

டிஆர்டிஓவின் பல்வேறு சாதனைகளில் ஒன்றாக, 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம், நீண்டதூர ஹைபர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதை அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ள மத்திய அரசு, அக்னி பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தி பல இலக்குகளைத் தாக்கிவிட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேரும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்ததையும் குறிப்பிட்டுள்ளது.

இதுபோன்ற பல சோதனைகள் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்திலும் பல வெற்றிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் மத்திய அரசு கூறியது.

குறிப்புச் சொற்கள்