ரூ.2 கோடி லஞ்சப் புகார்: ஞானேஷ் குமார் மீது விசாரணை நடத்த கேரளா அனுமதி

ரூ.2 கோடி லஞ்சப் புகார்: ஞானேஷ் குமார் மீது விசாரணை நடத்த கேரளா அனுமதி

கோப்புப் படம்: தினமணி

05 Nov 2026 - 1:01 pm

2 mins read

திருவனந்தபுரம்: இந்தியாவின் தற்போதைய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது 20 ஆண்டுகளுக்கு முன்பு கூறப்பட்ட ரூ.2 கோடி லஞ்சப் புகார் தொடர்பாக முதற்கட்ட விசாரணை நடத்தக் கேரள அரசு அனுமதியளித்துள்ளது.

ஞானேஷ் குமார் 2006ல் கேரளப் பொதுப்பணித்துறைச் செயலராக இருந்தபோது, உலக வங்கியின் ஆதரவுடன் திருவனந்தபுரம் - கோட்டயம் இடையே எம்.சி. சாலை விரிவாக்கப் பணிகளை இந்தியா - மலேசியா கூட்டு நிறுவனமான பேட்டி-பெல் (PATI-BEL) மேற்கொண்டு வந்தது. அத்திட்டப் பணிகளுக்கான நிலுவைத் தொகையை விடுவிப்பதற்காக ஞானேஷ் குமார் ரூ.2 கோடி லஞ்சம் கோரியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நிலுவைத் தொகை கிடைக்காததால் திட்டப் பொறியாளரான மலேசியாவைச் சேர்ந்த லீ சீ பீன் 2005ல் உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் அவரது உயிர்மாய்ப்புக் குறிப்பில் ஞானேஷ் குமாரின் பெயர் இருந்ததாகவும் உள்ளூர் ஒப்பந்ததாரர் சாஜன் புதிய புகார் அளித்துள்ளார்.

முன்னதாகப் போதிய ஆதாரமின்மையால் கைவிடப்பட்ட இவ்வழக்கின் பழைய கோப்புகளைச் சமர்ப்பிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 76 பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி விதிகளின்றி ஒப்பந்தம் வழங்கிய விவகாரத்திலும் இவரது பெயர் இடம்பெற்றிருந்தது.

அதேவேளையில், 2006ஆம் ஆண்டே குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த இயலாததால் விசாரணை முடிக்கப்பட்டு 2012ல் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா முன்னர் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

வாக்காளர் பட்டியல் முறைகேடு விவகாரத்தில் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராடிவரும் சூழலில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ள இந்நடவடிக்கை அவருக்குப் பெரும் அரசியல், சட்ட நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்