தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூதாட்டச் செயலி மூலம் ரூ.2,000 கோடி மோசடி: மதுரை உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

1 mins read
86d61881-a605-49f9-be32-e36ca448fbc0
மகாராஷ்டிர மாநிலம் மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு, இந்தச் சூதாட்டச் செயலியுடன் தொடர்புள்ள முகவர்கள் பல நகரங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி, பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. - சித்திரிப்புப் படம்: ஊடகம்

மும்பை: சூதாட்டச் செயலி மூலம் நடந்துள்ள ரூ.2,000 கோடி பணப்பரிவர்த்தனை தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் உள்ள 15 இடங்களில் அதிரடி சோதனை நடவடிக்கையைஆ மேற்கொண்டனர். இந்தச் சோதனை தமிழக நகரம் ஒன்றிலும் நடந்தது.

நாடு முழுவதும் சூதாட்டச் செயலி மூலம் ஏராளமானோர் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர். இதனால் பலர் தங்கள் வாழ்க்கையையும் இழக்க நேரிடுகிறது.

உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்கள் அதிகரிப்பதை அடுத்து, இணைய வழிச் சூதாட்டத்திற்குத் தடை விதிக்க பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சூதாட்டச் செயலியுடன் தொடர்புள்ள பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். மும்பை, டெல்லி, ஜெய்ப்பூர், ஹைதராபாத், மதுரை எனப் பல்வேறு இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.

ரூ.2,000 கோடி பணம் பல்வேறு பணப்பரிவர்த்தனை முறைகளைப் பயன்படுத்தி வசூலிக்கப்பட்டு, ‘கிரிப்டோ வாலட்கள்’ வழியாக மதுரையில் தொடங்கப்பட்ட போலி வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் பின்னர் அங்குள்ள ‘ஏடிஎம்’ மையங்கள் மூலம் அந்தப் பணம் எடுக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு, இந்தச் சூதாட்டச் செயலியுடன் தொடர்புள்ள முகவர்கள் பல நகரங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி, பணமோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இவ்வாறு ரூ.2,000 கோடி வரை சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது.

மதுரையில் நடந்த சோதனையின்போது கைப்பேசிகள், கணினிச் சாதனங்கள், முக்கிய ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

குறிப்புச் சொற்கள்