புதுடெல்லி: 2025 பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி சட்டப் பேரவைத் தோ்தலுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் உள்ளது.
டெல்லியில் உள்ள பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்குவதற்காக ‘முக்ய மந்திரி மகிளா சம்மான் யோஜனா’வைத் தொடங்குவதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்தாா்.
மேலும், தோ்தலுக்குப் பிறகு இந்தத் தொகை ரூ.2,100 ஆக உயா்த்தப்படும் என்று உறுதியளித்தாா்.
இருப்பினும், இன்னும் 10, 15 நாள்களில் தோ்தல் அறிவிக்கப்படும் என்பதால் தோ்தலுக்குப் பின்னரே பயனாளிகளின் கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் அவா் தெளிவுபடுத்தி உள்ளார்.
இது குறித்து கெஜ்ரிவால் மேலும் கூறுகையில், “முதல்வா் அதிஷி தலைமையிலான டெல்லி அமைச்சரவை மகளிர் உதவித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
“பெண்கள் தங்கள் பதிவை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கலாம். ஆம் ஆத்மி கட்சி தோ்தலில் வெற்றி பெற்றால் இத்திட்டத்தின்கீழ் மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகை ரூ.2,100ஆக உயா்த்தப்படும்.
“இத்திட்டத்துக்கு 2024-25 பட்ஜெட்டில் ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்து அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் அவா்களின் நிதித் தேவைகளை நிவா்த்தி செய்வதற்காகவும் உள்ளது.
“பாஜக இதை இலவச ‘ரெவ்டிஸ்’ என்று அழைக்கிறது. ஆனால், இதனை நமது சமூகத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு படியாகத்தான் நான் பாா்க்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“இலவச மின்சாரம் தருவோம் என்று சொன்னேன். அதைச் செய்தோம். நான் ஒரு கணக்கு மந்திரவாதி என்று பாஜகவிடம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
“சட்டப்பேரவைத் தோ்தலில் 60க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றுவோம்,” என்று உறுதிபடத் தெரிவித்தார் கெஜ்ரிவால்.