புதுடெல்லி: இந்தியாவின் ஜென்சோல்-ப்ளூஸ்மார்ட் நிறுவனங்கள் ரூ.256 கோடி நிதி மோசடியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
அந்நிறுவனங்களின் உரிமையாளர்களான அன்மோல் ஜக்கி, புனீத் ஜக்கி சகோதரர்கள் இருவரும் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டதாக, ‘செபி’ (SEBI) எனப்படும் இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் குற்றஞ்சாட்டி உள்ளது.
இதுதொடர்பான விரிவான அறிக்கையையும் அது வெளியிட்டது. இதனால் இந்தியாவில் புதிதாகத் தொழில் தொடங்கும் (ஸ்டார்ட்அப்) நிறுவனங்களுக்கு பல்வேறு வகையிலும் சிக்கல் எழும் என முதலீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஜென்மோல் நிறுவனர்களான ஜக்கி சகோதரர்கள், வணிக மேம்பாட்டிற்கான நிதியைத் தனிப்பட்ட ஆதாயங்களுக்குப் பயன்படுத்தியதுடன், 30 ஆயிரம் மின்சார வாகனங்களை விற்பனை செய்வதற்கான ஆர்டர்களைப் பெற்றதாக கூறியது பொய்யானத் தகவல் என ‘செபி’ ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய மின்சார வாகனச் சந்தைப் புரட்சியின் வெற்றியாளர்கள் எனப் பாராட்டப்பட்டு வந்த சகோதரர்கள், தங்கள் நிறுவனத்துக்காக நிதி மோசடி மற்றும் விதிமீறல்களில் ஈடுபட்டிருப்பது பல்வேறு தரப்பினரை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
“பல்வேறு அமைப்புகளில் இருந்து பெற்ற நிதியை பல பரிவர்த்தனைகள் மூலம் மடைமாற்றி, ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு, வெளிநாட்டுப் பணம், கோல்ஃப் மன்றங்களில் முதலீடு, நகைகள் போன்ற ஆடம்பரச் செலவுகளுக்குப் பயன்படுத்தி உள்ளனர். குடும்ப உறுப்பினர்களுக்காகவும் கோடிக்கணக்கில் செலவிட்டுள்ளனர்.
நிறுவனங்களுக்காகப் பெறப்பட்ட நிதி, தனிப்பட்ட செல்வம்போல் கருதப்பட்டுள்ளது,” என்று செபி வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.
ஜென்சோல் நிறுவனம் தனது உற்பத்தி தொடர்பாக வெளியிட்ட தவறான தகவல்களால் அதன் சந்தை மதிப்பு உயர்ந்து, பங்கு விலை அதிகரித்தது என்றும் உண்மையில் அதன் உற்பத்தி குறைந்தபட்ச அளவிலேயே நடப்பது தெரியவந்தது என்று செபி அதிகாரிகள் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
கடன் நிறுவனங்களுக்குப் போலி கடிதங்களை வழங்கியதாகவும், சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தியதாகப் பொய்யான ஆவணங்களைக் காட்டியதாகவும் ஜென்சோல் நிறுவனம்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், வாகனங்கள் வாங்குவதற்காகப் பெறப்பட்ட கடன் தொகையில், ரூ.262 கோடி கணக்கில் வராமல் போனதாக செபியின் அறிக்கை தெரிவிக்கிறது.
இதையடுத்து, புதிதாகத் தொழில் தொடங்கும் நிறுவனங்கள் அதிக பொறுப்புணர்வுடன் அனைத்து நெறிமுறைகளைக் கடைப்பிடிப்பதற்கு ஏற்ப அவை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என துறைசார்ந்த நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

