அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.2,790 கோடி முதலீடு

அதானி ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தில் ரூ.2,790 கோடி முதலீடு

கோப்புப் படம்: புளூம்பெர்க்

24 Nov 2026 - 4:03 pm

2 mins read

புதுடெல்லி: அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் விமான நிலைய இயக்கப் பிரிவான ‘அதானி ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட்’, மிக விரைவில் ‘360 ஒன் அசெட்’ நிறுவனத்திடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டாலர் (ஏறக்குறைய ரூ.2,790 கோடி) முதலீட்டைப் பெற ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்தியாவின் வேகமாக வளர்ந்துவரும் விமானப் போக்குவரத்துச் சந்தையில் உள்கட்டமைப்பு, பயணிகள் கையாளும் திறனை விரிவுபடுத்தும் நோக்கில் இந்த நிதி திரட்டப்படுகிறது.

முன்னதாக, ஆல்பா வேவ் குளோபல், பிரேம்ஜி இன்வெஸ்ட், டெமாசெக், பிளாக்ராக் ஆகிய நிறுவனங்களை உள்ளடக்கிய கூட்டமைப்பு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை உறுதி செய்திருந்தது.

இதன் தொடர்ச்சியாக நடைபெறும் தற்போதைய முதலீட்டின்மூலம், ‘அதானி ஏர்போர்ட்ஸ்’ நிறுவனத்தின் மொத்தப் பங்கு நிதித்திரட்டல் ஏறக்குறைய 1.35 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.

இந்த இரு சுற்று முதலீடுகளின் அடிப்படையில் நிறுவனத்தின் மதிப்பு கிட்டத்தட்ட 18 பில்லியன் அமெரிக்க டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிவர்த்தனைகள் முழுமையடையும்போது, முதலீட்டாளர்கள் கூட்டாக 7.01 விழுக்காட்டுப் பங்குகளை வைத்திருப்பார்கள்.

மும்பை, நவி மும்பை, அகமதாபாத், லக்னோ, ஜெய்ப்பூர், கௌஹாத்தி, மங்களூரு, திருவனந்தபுரம் ஆகிய எட்டு விமான நிலையங்களை அதானி நிறுவனம் நிர்வகித்து வருகிறது.

2026ஆம் நிதியாண்டில் கிட்டத்தட்ட 9.53 கோடிப் பயணிகளைக் கையாண்டுள்ள இந்நிறுவனம், நாட்டின் மொத்த விமானப் பயணிகள் போக்குவரத்தில் 23 விழுக்காட்டுப் பங்கைக் கொண்டுள்ளது.

புதிதாகத் திரட்டப்படும் நிதி, விமான நிலையங்களை நவீனமயமாக்குதல், பயணிகள் கையாளும் திறனை ஆண்டுக்கு 20 கோடியாக உயர்த்துதல், விமான நிலையங்களைச் சுற்றி வணிகம், பொழுதுபோக்கு, சரக்குப் போக்குவரத்து வசதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ‘விமான நிலைய நகரங்களை’ உருவாக்குதல் ஆகிய மூன்று முக்கியப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட உள்ளதாக நிறுவனத்தின் இயக்குநர் ஜீத் அதானி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்