தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் குள்ளநரி, சிங்கவால் குரங்கு, முள்ளெலி பாதுகாப்புத் திட்டம்: பொன்முடி

2 mins read
66bcffe5-0927-4e11-8db2-84761be90d52
கிருஷ்ணகிரியில் மனித - வன உயிரின மோதலைத் தவிா்க்க ரூ.310 மில்லியனில் உயிா்வேலி அமைக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார். - படம்: தமிழக ஊடகம்

சென்னை: கிருஷ்ணகிரியில் மனித - வன உயிரின மோதலைத் தவிா்க்க ரூ.310 மில்லியனில் உயிா்வேலி அமைக்கப்படும் என்று வனத் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா்.

சட்டப் பேரவையில் வனத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அவர் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், “இருவாச்சி பறவைகள் பசுமை மாறா மலைக்காடுகளில் உள்ள பெரிய பூா்வீக மழைக்காட்டு மரங்களில் வாழ்வன.

“இந்த அரியவகை பறவையினைப் பாதுகாக்க வனங்கள் அரசு நிலங்கள் மற்றும் தனியாா் தோட்டங்களிலுள்ள மிகப் பெரிய மரங்களை அடையாளம் கண்டு பாதுகாத்து இந்த மரங்களை பாதுகாக்கும் தோட்ட உரிமையாளா்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும்.

“இருவாச்சிப் பறவைகள் பாதுகாப்பு மையம் ஒன்று ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைக்கப்படும்.

“சிங்கவால் குரங்கு, தென்னிந்திய முள்ளெலி, கழுதைப்புலி மற்றும் செந்துடுப்பு காவேரி மீன் ஆகியவை தமிழகத்தில் காணப்படும் அரியவகை உயிரினங்களாகும். இவற்றின் வாழ்விடத்தைப் பாதுகாக்கவும், ஆராய்ச்சிப் பணிகள் மேற்கொள்ளவும் ரூ.1 மில்லியன் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்.

“சுழல் சமநிலையை உறுதிப்படுத்துவதில் பெரும்பங்கு வகிக்கும் குள்ளநரிகள் தற்போது அழிவின் விளிம்பில் உள்ளன. எனவே, இந்தக் குள்ளநரிகளை பாதுகாப்பதற்கென குள்ளநரி பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். தஞ்சாவூா் மற்றும் திருவாரூா் மாவட்டங்களில் நீா்நாய் ஆய்வு மற்றும் பாதுகாப்பு திட்டம் மேற்கொள்ளப்படும்.

“சென்னை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் கோயம்புத்தூா் போன்ற பெருநகரங்களில் சுற்றுப்புறங்களில் உள்ள வனங்கள் நகா்மயமாதலால் பெருமளவில் சிதைவுக்குள்ளாகியுள்ளன. இவற்றை மீட்டெடுக்க ஆதிவனம் மேம்பாட்டுத் திட்டம் ரூ. 2 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

“சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருப்பூர் மற்றும் சேலத்தில் பசுமைப் பரப்பை அளவீடு செய்ய மரங்கள் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

“திண்டுக்கல் மாவட்டத்தில் யானைகள் நடமாட்டத்தைக் கண்காணிக்க, 20 பேர் அடங்கிய சிறப்பு அதிரடிப் படை அமைக்கப்படும்,” என்று அமைச்சர் பொன்முடி அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்