புதுடெல்லி: மின்னிலக்கக் குற்றங்கள் மூலம் ரூ.54,000 கோடி பணம் மோசடி செய்யப்பட்டிருப்பதை ஒரு மாபெரும் கொள்ளை அல்லது திருட்டாக கருத வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அந்தத் தொகை இந்தியாவின் சில சிறிய மாநிலங்களின் வரவுசெலவுத் திட்டத்தைவிட அதிகம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கியும் பிற வங்கிகளும் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
உச்ச நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (பிப்ரவரி 9) நடந்த மின்னிலக்கக் குற்றங்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா, நீதிபதி என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி அல்லது மத்திய தொலைத்தொடர்புத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், மின்னிலக்க குற்றங்களை திறம்பட கையாள்வது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சு நான்கு வாரங்களுக்குள் ஒரு வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சில வங்கி அதிகாரிகளின் கூட்டு சதி அல்லது அலட்சியம் காரணமாக இதுபோன்ற குற்றங்கள் நடக்கலாம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மின்னிலக்கக் கைது வழக்குகளை விரைந்து விசாரிக்க சிபிஐ.க்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நிலுவையில் உள்ள மின்னிலக்கக் கைது வழக்குகளின் விசாரணைகளை தொடர்ந்து நடத்துவதற்கு சிபிஐக்கு அனுமதி வழங்குமாறு குஜராத், டெல்லி அரசுகளை அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், மின்னிலக்கக் கைது வழக்குகளில் இழப்பீடு வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்குவது குறித்து ரிசர்வ் வங்கி, தொலைத்தொடர்புத் துறை, பிற நிறுவனங்கள் கூட்டு ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
இந்த வழக்குத் தொடர்பாக புதிய நிலை அறிக்கைகளைத் தாக்கல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
மின்னிலக்க தொழில்நுட்பம் மூலம் இடம்பெறும் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குறிப்பாக மோசடிக்காரர்கள் ‘மின்னிலக்கக் கைது’ என்ற முறையை பயன்படுத்தி பொதுமக்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் பறிக்கின்றனர்.
இவ்வாறு பல்வேறு நூதன முறைகளில் நாடு முழுவதும் மின்னிலக்க குற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

