சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில் சரக்குப் போக்குவரத்து மூலம் ரூ.618.51 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட 5.413 மில்லியன் டன் எடையுள்ள அத்தியாவசியப் பொருள்கள், மின்சார உற்பத்திக்குத் தேவையான பொருள்கள், கனரகத் தொழில்துறைச் சரக்குகள் போன்றவை நாடு முழுவதும் வெற்றிகரமாகக் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளன.
அனல்மின் நிலையங்களின் எரிபொருள் தேவைக்காக 3.517 மில்லியன் டன் நிலக்கரி கொண்டுசெல்லப்பட்டதன் மூலம் அதிகபட்சமாக ரூ.346.42 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
இது மொத்தச் சரக்கு வருவாயில் 56 விழுக்காடு ஆகும். ஹூண்டாய், ரெனால்ட் நிசான், ஓலா, டிவிஎஸ் போன்ற முன்னணி நிறுவனங்களின் மோட்டார் வாகனங்களும் தொழில்துறைக் கருவிகளும் 370 சரக்கு ரயில்கள் மூலம் கையாளப்பட்டதில் ரூ.122.64 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வாகனங்களைக் கொண்டுசென்றதற்கு மட்டும் ரூ.90.62 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
உள்நாடு, ஏற்றுமதி-இறக்குமதிக் கொள்கலன்களால் ரூ.76.76 கோடி வருவாயும் பெட்ரோலியப் பொருள்களால் ரூ.37.03 கோடியும் உரங்களால் ரூ.22.90 கோடியும் உணவு தானியங்களால் ரூ.6.32கோடி வருவாயும் ஈட்டப்பட்டுள்ளன.
வட்டாரப் பொருளியல் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நம்பகமான சரக்குப் போக்குவரத்துச் சேவைகளை வழங்கச் சென்னைக் கோட்டம் உறுதியுடன் செயல்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
