மும்பை: எஃகு வணிக நிறுவன உரிமையாளரின் கைப்பேசி எண்ணுக்குள் ஊருருவி, அவரது வங்கிக் கணக்கில் நுழைந்த மோசடிப் பேர்வழிகள், ரூ.7.42 கோடியைச் சுருட்டிய சம்பவம் பேரதிர்ச்சி அளித்துள்ளது.
இதனையடுத்து, அப்பணம் எங்கே சென்றது என்பதைக் கண்டறிய மும்பைக் காவல்துறையின் இணையக் குற்றத் தடுப்புப் பிரிவினர் முழுமையான விசாரணையைத் தொடங்கினர்.
ஸ்ரீகிருஷ்ணா ஸ்டீல் நிறுவன இயக்குநர் விகாஸ் குப்தாவிற்குக் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி ஏர்டெல் நிறுவனத்திடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
அதில், “சிம் அட்டையை மாற்றுவதற்கான உங்களது வேண்டுகோள் ஏற்கப்பட்டுள்ளது. இவ்வேண்டுகோளை நீங்கள் விடுக்கவில்லை எனில், 121 என்ற எண்ணிற்கு ‘NOSIM’ எனப் பதிலனுப்பவும் அல்லது உடனடியாக 121ஐ அழைக்கவும்,” எனக் கூறப்பட்டிருந்தது.
ஏதோ தவறு நிகழ்வதை உணர்ந்த திரு குப்தா, உடனடியாக ‘ஏர்டெல் கேலரி’யைத் தொடர்புகொண்டார். அதன்பிறகே அவரது கைப்பேசி எண் ஊடுருவப்பட்டது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து, தம் வங்கிக் கணக்கிற்குள்ளும் ஊடுருவி இருப்பார்களோ என அஞ்சி, அதனைச் சோதித்தார் திரு குப்தா. அவர் அஞ்சியபடியே, அவரது கணக்கிலிருந்து பெரும்பணம் மாற்றிவிடப்பட்டிருந்தது.
டிசம்பர் 23ஆம் தேதி காலைவரை அந்த மோசடிப் பரிவர்த்தனைகள் இடம்பெற்றிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரது கணக்கில் ரூ.1.37 கோடி மட்டுமே இருந்த நிலையில், ‘ஓவர்டிராஃப்ட்’ வசதியைப் பயன்படுத்தி இணையக் குற்றவாளிகள் ரூ.7.42 கோடி பணத்தைச் சுருட்டியிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
உடனடியாக வங்கி அதிகாரிகளைத் தொடர்புகொண்டு, தமது பற்றுப் பரிவர்த்தனைகளை முடக்கினார் திரு குப்தா.
அவரது பணம் பல்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிவிடப்பட்டதைக் காவல்துறை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து விவரித்த காவல்துறை அதிகாரி ஒருவர், “இது சிம் பரிமாற்றம் தொடர்பான வழக்கு. இவ்வகையில், பாதிக்கப்பட்டவரின் சிம் அட்டையை செயலிழக்க வைக்கும் மோசடிப் பேர்வழிகள், அதனை இன்னொரு கருவியில் செயல்படுத்தி, வங்கி ‘ஓடிபி’ மற்றும் தனிப்பட்ட விவரங்களைப் பெறுவர். இதில் உள்வேலை ஏதும் இருக்குமோ என்றும் ஐயப்படுகிறோம்,” என்றார்.