புதுடெல்லி: இருவேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த இந்தியர்கள் இருவர் தாய்லாந்திலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் நாடுகடத்தப்பட்டு, பின்னர் கைதுசெய்யப்பட்டனர்.
அவ்விருவரும் அனைத்துலகக் காவல்துறையால் (இன்டர்போல்) சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டு, தேடப்பட்டுவந்த குற்றவாளிகள் என்று மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) தெரிவித்தது.
மோசடி முதலீட்டுத் திட்டத்தின்கீழ் முதலீட்டாளர்களின் ரூ.87 கோடி பணத்தைச் சுருட்டியதாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜனார்த்தனன் சுந்தரம் என்பவர்மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தாய்லாந்துத் தலைநகர் பேங்காக்கிலிருந்து நாடுகடத்தப்பட்ட அவரைக் கோல்கத்தா விமான நிலையத்தில் புதன்கிழமையன்று தமிழகக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இம்மாதம் 28ஆம் தேதி பேங்காக்கிற்குச் சென்ற சுந்தரம், இன்டர்போலின் சிவப்பு அறிக்கை காரணமாகத் தாய்லாந்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
அதனைத் தொடர்ந்து, மறுநாள் அவர் அங்கிருந்து இந்தியாவிற்குத் திருப்பியனுப்பப்பட்டார். தகவலறிந்து அவரைக் கைதுசெய்வதற்காகத் தமிழகக் காவல்துறையினர் கோல்கத்தா சென்றனர்.
இரண்டாவது நடவடிக்கையில், ஏமாற்று, மோசடி, குற்றச் சதி போன்றவை தொடர்பில் கடந்த 20 ஆண்டுகளாகக் காவல்துறையால் தேடப்பட்டு வந்த வீரேந்திரபாய் மணிபாய் பட்டேல் என்ற குஜராத் ஆடவர் அமெரிக்காவிலிருந்து நாடுகடத்தப்பட்டு, பின்னர் அகமதாபாத் விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.
குஜராத்தின் ஆனந்த் பகுதியில் செயல்பட்டு வந்த சரோதர் நக்ரிக் சககாரி வங்கியின் இயக்குநரான பட்டேல் ரூ.77 கோடியை மோசடிசெய்துவிட்டதாகக் கடந்த 2002ஆம் ஆண்டு அம்மாநிலக் காவல்துறை வழக்கு பதிந்தது.
தொடர்புடைய செய்திகள்
அதனைத் தொடர்ந்து, 2004 மார்ச் 3ஆம் தேதியன்று அவரைத் தேடப்படும் குற்றவாளியாக இன்டர்போல் அறிவித்தது.