ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவு; மத்திய அரசைச் சாடும் எதிர்க்கட்சிகள்

2 mins read
004b286a-dd05-4074-96d3-5674e01bd7f3
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ். - கோப்புப்படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு என்றும் இல்லாத வகையில் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இப்போது ஓர் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.86.54ஆக உள்ளது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசை விமர்சித்து வருகின்றன.

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதற்கு காரணம் ஆளும் அரசின் திறமையின்மை என திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி சாகேத் கோகலே விமர்சித்துள்ளார். இதே போல சிவசேனா கட்சியின் (உத்தவ் பால் தாக்கரே அணி) மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, ‘இந்த விவகாரம் குறித்து அரசாங்கம் இன்னும் வாய் திறக்காதது ஏன்,” எனக் கேட்டுள்ளார்.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இதுகுறித்துப் பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்றபோது அவருக்கு 64 வயது. அப்போது அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.58.58 ஆக இருந்தது. மோடி பதவியேற்றதும், ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டுள்ளது. அதை உடனடியாக வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். ஆனால், இப்போது ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா, “பிரதமர் மோடி தனது மூன்றாவது பதவிக்காலத்தில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை உறுதி செய்வேன் என்று கூறினார். ஆனால், நம் நாட்டின் வெளிநாட்டுக் கடன் ரூ.200 லட்சம் கோடியாக உள்ளது. இந்தச் சூழலில் ரூபாயின் மதிப்பு சரிந்து வருவது நாட்டின் பொருளியல் சீர்குலைந்து போயுள்ள நிலையையே எடுத்துக் காட்டுகிறது,” என்று கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்