இந்தியாவுடன் இணைந்து போர் விமானத்தைத் தயாரிக்கத் தயார்: ரஷ்ய அதிபர்

இந்தியாவுடன் இணைந்து போர் விமானத்தைத் தயாரிக்கத் தயார்: ரஷ்ய அதிபர்

2 mins read
a436311d-a222-487e-a27e-6688776a9753
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின். - படம்: இந்தியா டுடே

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: ரஷ்யாவின் அதிநவீன ஐந்தாம் தலைமுறை போர் விமானமான சுகோய் சு-57 ரக விமானத்தை இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க மாஸ்கோ தயாராக இருப்பதாக அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உலகளாவிய செய்தி நிறுவனங்களின் தலைவர்களுடன் பேசிய அவர், சுகோய் சு-57 போர் விமானத்தை உலகின் மிகச்சிறந்த விமானம் என்று பாராட்டினார்.

இந்த பன்முகத் திறன் கொண்ட போர் விமானத் திட்டத்தில், எந்தவித நிபந்தனையும் இன்றி இந்தியாவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

இந்திய விமானப்படை தனது தேவைகளுக்காக ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைத் தேடி வரும் சூழலில் திரு புட்டின் இதனைத் தெரிவித்துள்ளார்.

“சுகோய் சு-57 விமானத்தைப் பொறுத்தவரை, எங்கள் இந்திய நண்பர்களுக்கு நாங்கள் முன்மொழிந்த அம்சங்களின் அடிப்படையில் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்பத்தில் ஒன்றிணைந்து செயல்படத் தயாராக இருக்கிறோம்.

“இன்றைய தேதி வரை இதுவே ஆகச் சிறந்த விமானம் என்று கருதுகிறேன். ஆயினும் இதுபற்றி யோசிக்கலாம் என்று இந்திய நண்பர்கள் கூறியுள்ளனர்,” என்றார் அவர்.

இந்த அதிநவீன விமானத்தை ரஷ்யா தனித்தே உருவாக்கிய போதிலும், இந்தியாவுடன் இணைந்து கூட்டுத் திட்டமாகச் செயல்படுத்த தங்களுக்கு எந்தவிதத் தடைகளோ அல்லது வரம்புகளோ இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

முன்னதாக, இந்த விமானத் தயாரிப்பு தொடர்பான ஒத்துழைப்புக்கான ரஷ்யாவின் யோசனை இன்னும் பரிசீலனையில் உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த திரு புட்டின், “சோவியத் காலம் தொட்டே இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கிய ராணுவ-தொழில்நுட்ப ஒத்துழைப்பு நீடித்து வருகிறது. இந்திய ஆயுதப் படையின் கணிசமான பிரிவினர் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட போர்க் கருவிகளையே தொடர்ந்து இயக்கி வருகின்றனர்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்
ரஷ்யாபோர் விமானம்ஒத்துழைப்பு