சபரிமலை நெய் விநியோக மோசடி: இருவர் கைது

சபரிமலை நெய் விநியோக மோசடி: இருவர் கைது

கோப்புப் படம்: மாலை மலர்

14 Nov 2026 - 7:48 pm

2 mins read

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கான ‘மில்மா’ நெய் விநியோகத்தில் நடைபெற்ற பெரும் மோசடி தொடர்பாக, தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு நெய் வியாபாரிகளைக் கேரள ஊழல் தடுப்புத்துறையின் சிறப்புப் படை கைது செய்துள்ளது.

திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரிய ஒப்பந்தத்தின்கீழ், கேரள கூட்டுறவுப் பால் விற்பனைக் கூட்டமைப்பின் தரமான ‘மில்மா’ நெய் சபரிமலை கோவிலுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 2025ஆம் ஆண்டு மகரவிளக்குப் பூசைக் காலத்தில் கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட நெய்யில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடியில் முக்கியக் குற்றவாளியான ஒப்பந்ததாரர் எஸ்.எஸ். பினு, கோவில் வாரியத்துக்கு வழங்க வேண்டிய 11,000 லிட்டர் தரமான நெய்யைச் சட்டவிரோதமாக வெளியே விற்பனை செய்துவிட்டு, அதற்குப் பதிலாகத் தரமற்ற நெய்யைக் கோவிலுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த முறைகேட்டின் மூலம் திருவிதாங்கூர் ஆலய நிர்வாகத்திற்குு ஏறக்குறைய ரூ.2.50 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஒப்பந்த விதிகளை மீறிச் சட்டவிரோதமாக விற்கப்பட்ட நெய் என்று தெரிந்தே, ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன், குமரன் ஆகிய இரு வியாபாரிகளும் பினுவிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான நெய்யைக் கொள்முதல் செய்துள்ளனர்.

பணப் பரிவர்த்தனை தொடர்பான மின்னிலக்க ஆதாரங்கள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக, இணைய வழியைத் தவிர்த்து நேரடியாகப் பணத்தைக் கொடுத்து அவர்கள் கடத்தலில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஏற்கெனவே இந்த வழக்கில் ஒப்பந்ததாரர் பினு, தேவஸ்வம் வாரிய ஊழியர் ஜெயலால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமறைவாக உள்ள மற்றொரு ஊழியரைக் கேரள ஊழல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

மேலும், சபரிமலை பிரசாதம் தயாரிப்புப் பொருள்கள் கொள்முதலில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தத் தொடர் கைது நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்