கொச்சி: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் விற்பனை செய்யப்படும் அபிஷேக நெய்யில் நிதி முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்துள்ளது.
2025ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 27ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் அந்தக் குற்ற நடவடிக்கை நடந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அந்தக் காலகட்டத்தில் கோயிலில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட 16,628 ‘பாக்கெட்’ நெய்யில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுகிறது. ஊழலுக்குத் திருவிதாங்கூர் தேவசம் ஊழியர்கள் 43 பேர் உதவியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நெய் விற்பனைத் தொகை திருவிதாங்கூர் தேவசம் அறக்கட்டளைக்குச் செலுத்தப்படவில்லை என்றும் இதனால் ரூ.17 லட்சத்துக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டது என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து, திருவிதாங்கூர் தேவசம் அறக்கட்டளையின் ஊழல் தடுப்புத்துறை அளித்த புகாரின் அடிப்படையில், கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து உடனடி குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் வி.ராஜா விஜயராகவன், கே.வி. ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வியாழக்கிழமை (ஜூன் 11) விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், “இது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ்வரும் குற்றமாகப் பதிவு செய்யப்படும். குற்றத்தை ஆராய்ந்து, அந்த அறிக்கையை நான்கு வாரக் காலத்திற்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
“விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், தகவல்களை அதிகாரி மூலம் சுதந்திரமாக மறு ஆய்வு செய்யவேண்டும். இந்த விவகாரத்தை நிர்வாக அலட்சியம் அல்லது குறைபாடுள்ள பதிவேடு என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கமுடியாது. விரிவான விசாரணையை நடத்தி அதை அறிக்கையாகத் தாக்கல் செய்யவேண்டும்,” என்றனர்.

