திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வந்த பாரம்பரியமிக்க ‘வெடி வழிபாடு’ இந்த ஆண்டு முதல் முற்றிலும் ரத்து செய்யப்படுவதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
முற்காலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியான சபரிமலையில், பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் வனவிலங்குகளை விரட்டுவதற்காகவும் எச்சரிக்கை ஒலி எழுப்பவும் இந்த வெடி வழிபாடு பயன்படுத்தப்பட்டது. பிற்காலத்தில், நிதிச்சுமை காரணமாக பக்தர்கள் கட்டணம் செலுத்தி நடத்தும் வழிபாட்டு முறையாக இது உருவெடுத்தது.
ஆண்டுதோறும் இதன் உரிமம் ஏலம் விடப்பட்டு, சான்றிதழ் பெற்ற ஒப்பந்ததாரர்கள் மூலம் பட்டாசுகள் வெடிக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில், வனத்துறையின் வழிகாட்டுதல்கள், வனவிலங்குகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அத்துடன் கோவிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், வனத்துறையினரின் அறிவுறுத்தலைத் தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான வெடி வழிபாட்டு ஏல நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் உடனடியாக ரத்து செய்துள்ளது.
