மணல் பற்றாக்குறை; மலேசியாவிலிருந்து மீண்டும் இறக்குமதி செய்ய தமிழகம் திட்டம்

மணல் பற்றாக்குறை; மலேசியாவிலிருந்து மீண்டும் இறக்குமதி செய்ய தமிழகம் திட்டம்

2 mins read
d9a23f55-d3c7-4e64-934f-7ef3aa372a9f
வெளிநாடுகளிலிருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்யும் திட்டத்தை மீண்டும் தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. - படம்: டெக்கன் குரோனிக்கள் 

சென்னை: தமிழகத்தில் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான ஆற்று மணலை மலேசியாவிலிருந்து மீண்டும் இறக்குமதி செய்ய தமிழக அரசு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டுவந்த 13 மணல் குவாரிகள், அமலாக்கத் துறை தொடுத்த வழக்கு காரணமாக கடந்த 2023ஆம் ஆண்டில் மூடப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, புதிதாக 30 இடங்களில் மணல் குவாரிகளைத் திறக்க முந்தைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதற்குரிய சுற்றுச்சூழல் அனுமதிகள் பெறப்பட்டபோதிலும், ஒப்பந்ததாரர்களிடையே ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அப்பணிகள் முடங்கின.

இதன் காரணமாக, கருங்கல் துகள்களைச் சுத்திகரித்துத் தயாரிக்கப்படும் ‘எம் சாண்ட்’ பயன்பாடு கணிசமாக அதிகரித்தது.

இருப்பினும், அரசு அனுமதி வழங்கிய நிறுவனங்களின் மொத்த உற்பத்தித் திறனைவிடக் கூடுதல் அளவில் எம் சாண்ட் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

கருங்கல் உடைப்பு நிறுவனங்களில் சில தரமற்ற எம் சாண்டை விற்பனை செய்வதால், அவற்றைப் பயன்படுத்திக் கட்டப்படும் கட்டடங்களின் உறுதித்தன்மை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, புதிய மணல் குவாரிகளைத் திறந்து, நவீனத் தொழில்நுட்பத்துடன் கூடிய இணையம் வழிமுறையில் மணல் விற்பனையைச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதற்கிடையே, வெளிநாடுகளிலிருந்து ஆற்று மணலை இறக்குமதி செய்யும் திட்டமும் மீண்டும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

“2018ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக்காலத்தில் மலேசியாவிலிருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு மணல் இறக்குமதி செய்யப்பட்டது. பின்னர், தூத்துக்குடி, எண்ணூர் துறைமுகங்கள் வழியாக மணல் விற்பனை நடைபெற்றது. ஆனால், உள்ளூர் ஆற்று மணல் , எம் சாண்ட் ஆகியவற்றின் விலையைவிட இறக்குமதி மணலின் விலை அதிகமாக இருந்ததால் அத்திட்டம் பாதியில் கைவிடப்பட்டது,” எனக் கனிமவளத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும், “தற்போது ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் வெளிநாடுகளிலிருந்து மணலை இறக்குமதி செய்து வருகின்றன. அங்குப் பின்பற்றப்படும் நடைமுறைகளை ஆராய்ந்து, தமிழகத்திலும் ஆற்று மணலை இறக்குமதி செய்ய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விலை நிர்ணயம், விற்பனை விதிமுறைகள் வகுக்கப்பட்டதும், இறக்குமதி மணல் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்,” என அவர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
மலேசியாமண்இறக்குமதிதமிழ்நாடு