திருச்சூர்: கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டத்தில் உள்ள 78 தங்க நகை உற்பத்தி மையங்கள், மொத்த விற்பனை நிலையங்கள், குடியிருப்புகளில் மாநிலப் பொருள் சேவை வரி (ஜிஎஸ்டி) அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத 104 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 20% கேரள மாநிலத்துக்குச் செல்கிறது. கேரளாவில் கடந்தாண்டு மட்டும் ஏறக்குறைய 150 டன் தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அரசுக்குச் செலுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி மிகக் குறைவான அளவிலேயே வரவு வைக்கப்பட்டதை அடுத்து, கணக்கில் காட்டப்படாமல் தங்க விற்பனை அதிகளவில் நடைபெற்று வருவது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலை கேரள ஜிஎஸ்டி உளவுத்துறை துணை ஆணையர் தினேஷ் குமார் கடந்த 7 மாதங்களாகச் சேகரித்து வந்தார்.
இந்நிலையில், திருச்சூரில் ஒரேநேரத்தில் மிகப்பெரிய அளவில் சோதனை நடத்துவது குறித்து ஆறு உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிவிக்கப்பட்டது.
ரகசியமாக நடத்தப்பட்ட இந்த ஆபரேஷனுக்கு ‘தங்கக் கோபுரம்’ எனப் பெயரிடப்பட்டது.
கேரளாவின்பல மாவட்டங்களில் இருந்தும் 700க்கும் மேற்பட்ட வரித்துறை அதிகாரிகளைத் திருச்சூருக்குப் பயிற்சிக்கு வரும்படி வரவழைத்து, அவர்களை வைத்து கடந்த ஒரு சில நாள்களாக தங்க நகை உற்பத்தி செய்யும் இடங்கள், மொத்த வியாபாரம் நடைபெறும் இடங்கள் உள்ளிட்ட 78 இடங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.
கேரளாவில் இதுபோன்ற பெரிய அளவிலான சோதனை நடத்தப்பட்டது இதுவே முதல் முறை.
தொடர்புடைய செய்திகள்
இதில் கணக்கில் காட்டப்படாத 104 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பல கடைகளில் சோதனை நடந்து கொண்டிருந்தபோது, சில ஊழியர்கள் தங்கத்துடன் தப்பி ஓடினர். அவர்களை வரித்துறை அதிகாரிகள் விரட்டிப் பிடித்தனர். ஒருவர் 6.5 கிலோ தங்கத்தை எடுத்துக்கொண்டு தப்ப முயன்றார்.
கடை உரிமையாளர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரூ.1,200 கோடி அளவிலான விற்பனையைக் கணக்கில் காட்டாமல் மேற்கொண்டதை ஒப்புக்கொண்டனர்.
இவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக கணக்கில் காட்டாமல் மேற்கொண்ட தங்க விற்பனை விவரங்கள் குறித்து கேரள ஜிஎஸ்டி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 104 கிலோ தங்கம் அரசு கருவூலத்துக்கு மாற்றப்படவுள்ளது.
கணக்கில் காட்டப்படாத தங்கத்துக்கு 3% ஜிஎஸ்டி தொகை, 3% அபராதம் மற்றும் வட்டியைச் செலுத்திய பின்பே பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் உரிமையாளர்களிடம் மீண்டும் வழங்கப்படும் என கேரள ஜிஎஸ்டி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

