தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாதுகாப்புப் படையினர் - மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் மோதலில் ஐவர் மரணம்

1 mins read
மாண்டோரில் காவல்துறை அதிகாரியும் அடங்குவார்
7a54f73b-8271-4af2-b300-355f2efaeb8c
ஜனவரி 5ஆம் தேதி, வனப்பகுதியில் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. - சித்திரிப்பு: பிக்சாபே

புதுடெல்லி: இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஜனவரி 5ஆம் தேதி நடந்த மோதலில் ஐவர் கொல்லப்பட்டனர்.

அவர்களில் நால்வர் போராளிகள் என்றும் ஐந்தாமவர் காவல்துறையைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

நாராயண்பூர், தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் தெற்கு அபுஜ்மாத் காட்டில் சனிக்கிழமை (ஜனவரி 4) மாலை ஏற்பட்ட மோதலில் தலைமைக் காவலர் சன்னு கரம் உயிரிழந்தார்.

பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

துப்பாக்கிச் சண்டையின் முடிவில் மாண்ட மாவோயிஸ்டுகளின் உடல்களும் ஏ.கே.47 ரகத் துப்பாக்கி, எஸ்.எல்.ஆர். ரகத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டன.

மோதலுக்குப் பிறகும் அந்தப் பகுதியில் தேடுதல் பணி தொடர்கிறது.

சென்ற ஆண்டு (2024) இந்திய அரசாங்கம் மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. அதில் போராளிகள் ஏறக்குறைய 287 பேர் கொல்லப்பட்டதாக இந்திய அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன.

நக்ஸலைட்டுகள் என்ற சந்தேகத்தில் ஏறத்தாழ 1,000 பேர் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் 837 பேர் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த செப்டம்பரில் 2026ஆம் ஆண்டுக்குள் மாவோயிஸ்ட்டுகள் துடைத்தொழிக்கப்படுவர் என்று சூளுரைத்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்