பாஜக மூத்த தலைவர் அத்வானி மருத்துவமனையில் அனுமதி

1 mins read
ab82b05e-ceec-46bb-8290-037e1bbfe81c
முன்னாள் இந்தியத் துணைப் பிரதமர் எல்.கே. அத்வானி. - படம்: பிடிஐ

புதுடெல்லி: முன்னாள் இந்தியத் துணைப் பிரதமரும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான லால் கிருஷ்ண அத்வானியின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, டெல்லி அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சென்ற மாதம் தமது 97ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய திரு அத்வானி, கடந்த சில மாதங்களாக உடல்நலப் பிரச்சினைகளால் அவதியுற்று வந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வாண்டு ஜூலை மாதத்திலிருந்து அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது இது நான்காவது முறை. முன்னதாக, அப்போலோ மருத்துவமனையிலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் அவர் சிகிச்சை பெற்றார்.

இந்நிலையில், தங்களது மிகப் பெரிய தலைவரான அத்வானி விரைவில் குணமடைய பாஜக செய்தித் தொடர்பாளர் கே. கிருஷ்ண சாகர் ராவ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1927ஆம் ஆண்டு கராச்சி நகரில் பிறந்த அத்வானி, 1942ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார். பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்த அவர் நீண்டகாலத்திற்கு அக்கட்சியின் தேசியத் தலைவராகப் பதவி வகித்த பெருமைக்குரியவர்.

1999-2004 ஆண்டுகளில் திரு அடல் பிகாரி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது திரு அத்வானி உள்துறை அமைச்சராகவும் பின்னர் துணைப் பிரதமராகவும் பதவி வகித்தார்.

இவ்வாண்டு மார்ச் மாதம் அத்வானிக்கு இந்தியாவின் ஆக உயரிய ‘பாரத ரத்னா’ விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்