புதுடெல்லி: பாகிஸ்தான் போர்ப் பதற்றம் காரணமாக இந்தியாவில் தற்காலிகமாக மூடப்பட்ட 32 விமான நிலையங்களும் திறக்கப்பட்டன.
போர்ப்பதற்றத்தால் மே 15ஆம் தேதிவரை 32 விமான நிலையங்களை மூட உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தச் சூழலில், தாக்குதல் நிறுத்தம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளதால் 32 விமான நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டன.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடைபெற்ற ஆயுத மோதலைத் தொடர்ந்து சிவில் விமானங்களை இயக்க 32 விமான நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) திங்கட்கிழமை (மே 12) காலை வெளியிட்ட அறிவிப்பில், ஆதம்பூர், அம்பாலா, அமிர்தசரஸ், அவந்திபூர், பதிண்டா, புஜ், பிகானீர், சண்டிகர், ஹல்வாரா, ஹிண்டன், ஜெய்சல்மார், ஜம்மு, ஜாம்நகர், ஜோத்பூர், கண்ட்லா, காங்ரா (காகல்), கேஷோட், கிஷன்கர், குலு மணாலி (பூந்தர்), லே, லூதியானா, முந்த்ரா, நாலியா, பதான்கோட், பாட்டியாலா, போர்பந்தர், ராஜ்கோட் (ஹிராசர்), சர்சாவா, சிம்லா, ஸ்ரீநகர், தோய்ஸ், உத்தர்லாய் ஆகிய 32 விமான நிலையங்களும் தற்போது மீண்டும் சிவில் விமானப் போக்குவரத்துப் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டுள்ளன.
“பயணிகள் தாங்கள் பயணம் மேற்கொள்ள விரும்பும் விமானங்களின் இயக்கம்குறித்து சரிபார்த்து, சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விமான நிறுவனத்தின் வலைதளங்களைக் கண்காணிக்கப் பரிந்துரைக்கப்படுகிறது,” என்று தெரிவித்துள்ளது.
வழக்கநிலையில் டெல்லி அனைத்துலக விமான நிலையம்
இதனிடையே, டெல்லி அனைத்துலக விமான நிலையம் வழக்கம்போல் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டெல்லி அனைத்துலக விமான நிலைய லிமிடெட் (DIAL) திங்கட்கிழமை (மே 12) வெளியிட்ட எக்ஸ் பதிவில், “விமான நிலையச் செயல்பாடுகள் தற்போது சீராக உள்ளன.
“இருப்பினும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், பயணிகள் கூடுதல் நேரத்தை அனுமதிக்க வேண்டும். சீரான வசதிக்காக விமான நிறுவனம் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களுடன் ஒத்துழைக்க வேண்டும்,” என்று அறிவுறுத்தியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
டிரம்பின் சமரச யோசனையை நிராகரித்த மத்திய அரசு
இதனிடையே, காஷ்மீர் விவகாரத்தில் சமரசம் செய்யும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் யோசனையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.
அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சமூக ஊடகப் பதிவில்,போரை நிறுத்தியதை போல, காஷ்மீர் பிரச்சினையிலும் தீர்வு காண சமரசம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
ஆனால் அவரது சமரச யோசனையை மத்திய அரசு நிராகரித்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
காஷ்மீர் விவகாரத்தில் 3ம் நாட்டின் சமரசத்தை இந்தியா ஏற்காது என்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர், இந்தியாவிடம் திருப்பி ஒப்படைக்கப்படுவது குறித்து மட்டுமே விவாதிக்க வேண்டி இருப்பதாகவும் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத்தை பாகிஸ்தான் கைவிடும் வரை சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்பட்டு இருக்கும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதலை எதிர்கொண்டது குறித்து விளக்கம்
இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல்களை இந்தியக் கடற்படை எவ்வாறு எதிர்கொண்டது என்பது குறித்து வைஸ் அட்மிரல் ஏ.என். பிரமோத் பேசுகையில், “பல அடுக்குகள், நுட்பங்களைக் கொண்ட பாதுகாப்பு அமைப்பைத் தயாராக வைத்திருந்தோம். அனைத்து தளங்களில் இருந்தும் வந்த தாக்குதல்களை முறியடித்தோம்.
“எதிரியை பல நூறு கிலோ மீட்டர் தொலைவிலேயே நிறுத்திவிட்டோம். எதிரியால் நமது அருகே கூட வர முடியவில்லை. தேர்ந்தெடுக்கும் இலக்கைத் துல்லியமாகத் தாக்கும் அளவுக்கு இந்திய கடற்படை வலிமையானது,” என்று தெரிவித்துள்ளார்.