கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் உயிரிழப்பு

2 mins read
a7c68cbb-45f8-4253-8c87-94c37da0ba08
மே 3ஆம் தேதி அதிகாலை வேளையில், கோவிலுக்குள் மட்டுமல்லாமல், கோவிலுக்கு வெளியிலும் ஏராளமான பக்தர்கள் கூடினர். அங்கு போதுமான காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவில்லை எனக் கூறப்படுகிறது. - படம்: ஊடகம்

பனாஜி: கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் கோவாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

கோவாவில் உள்ள லைராய் தேவி கோவிலில் ஆண்டுதோறும் தீமிதித் திருவிழா நடைபெறும். இச்சமயம் கோவில் வளாகத்தில் ‘அக்னிதிவ்யா’ எனப்படும் சடங்குகள் நடைபெறும்.

இதில், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.

இந்த ஆண்டும் பக்தர்களின் வருகையால் திருவிழா களைகட்டியது.

கோவிலில் கூடிய பக்தர்கள் பலரும் சாமி தரிசனம் செய்ய, ஒரே சமயத்தில் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 3ஆம் தேதி அதிகாலை வேளையில், கோவிலுக்குள் மட்டுமல்லாமல், கோவிலுக்கு வெளியிலும் ஏராளமான பக்தர்கள் கூடினர். அங்கு போதுமான காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை என்றும் அதன் காரணமாகவே நெரிசல் ஏற்பட்டது என்றும் தெரிகிறது.

மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் இதை உறுதி செய்ததாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதற்கிடையே, செய்தியாளர்களிடம் பேசிய கோவா மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விஸ்வஜித் ராணே, காயம் அடைந்தவர்களில் எட்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிவித்தார்.

காயமடைந்தவர்கள் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மபுஸாவில் உள்ள வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை நேரில் சந்தித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஆறுதல் கூறினார்.

கோவாவில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திப்பதாக கூறியுள்ளார்.

இந்த நிகழ்வுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. 

குறிப்புச் சொற்கள்