புதுடெல்லி: இந்தியாவில் உள்ள 28 மாநில முதல்வர்களில் பாதிப்பேர், அதாவது 14 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பட்டியலின் முதலிடத்தில் இருப்பவர் தெலுங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி. அவர் மீது மட்டும் 89 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அடுத்ததாக, மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி மீது 29 வழக்குகளும் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் மீது 19 வழக்குகளும் உள்ளன. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது 19, கேரள முதல்வர் வி.டி. சதீசன் மீது 18 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்க்கு எதிராக இரண்டு குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பட்டியலில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் 5 வழக்குகள், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் 5, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் 4, பீகார் முதல்வர் சாம்ராத் சௌத்ரி 2, சிக்கிம் முதல்வர் தமாங் 1, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் 1, ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி 1, ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா 1 ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
தற்போதைய அல்லது முன்னாள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான குற்றவியல் வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதில் நீதிமன்றத்திற்கு உதவும் மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா உச்ச நீதிமன்றத்தில் இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீதான குற்ற வழக்குகள் பற்றிய தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
மொத்தமுள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 251 பேர் மீதும் 233 மாநிலங்களவை உறுப்பினர்களில் 75 பேர் மீதும் குற்றவியல் வழக்குகள் உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தப் பட்டியலிலும் தெலுங்கானாவே முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தைச் சேர்ந்த 17 எம்பிக்களின்மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.


