கடும் வெப்ப அலை: மருத்துவச் செலவு அதிகரிக்கும் ஆபத்து

கடும் வெப்ப அலை: மருத்துவச் செலவு அதிகரிக்கும் ஆபத்து

2 mins read
bcb134ba-ed7b-427a-942d-66b3d60bf030
அதிகரித்துவரும் வெப்ப அழுத்தம் காரணமாக, 2030ஆம் ஆண்டிற்குள் ஒட்டுமொத்த வேலை நேரமானது உலகளவில் 2.2 விழுக்காடாகக் குறையக்கூடும் என்று அனைத்துலகத் தொழிலாளர் அமைப்பு கணித்துள்ளது. - படம்: என்டிடிவி

புதுடெல்லி: இந்தியாவில் அதிகரித்துவரும் வெப்ப அலை மக்களின் உடல்நலத்தையும் நாட்டின் பொருளியலையும் கடுமையாகப் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவின் பல பகுதிகளில் இயல்பைவிட அதிக வெப்பநிலை பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சில மாநிலங்களில் வெப்ப அலை நீண்ட காலத்திற்கு நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் என்டிடிவி ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹரியானா, சண்டிகர், டெல்லி, பஞ்சாப், பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மதிய நேர வெப்பநிலை 42 டிசிரி செல்சியஸ் முதல் 45 டிகிரி செல்சியஸ்வரை பதிவாக வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

அதிக வெப்பம் தொழிற்சாலைகளிலும் விவசாயத் துறையிலும் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தும்.

உற்பத்தித் திறன் குறைவதால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய 4 விழுக்காடுவரை இழப்பு ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, வெளிப்புறங்களில் வேலை செய்யும் கட்டுமானத் ஊழியர்களும் விவசாயிகளும் அதிகப் பாதிப்புக்குள்ளாவார்கள்.

கடும் வெப்பத்தால், நெல் போன்ற உணவுப் பயிர்களின் விளைச்சல் குறையும். உற்பத்தி குறைவதால் சந்தையில் உணவுப் பொருள்களின் விலை உயரும். இது மக்களின் வாங்கும் சக்தியைக் குறைத்து, நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளியலைச் சுருக்கிவிடும்.

வெப்பம் தொடர்பான நோய்கள் அதிகரிப்பதால், மருத்துவச் செலவுகள் பெருமளவு உயரும். இது நடுத்தர, ஏழை எளிய குடும்பங்களின் நிதி நிலைமையைப் பாதிக்கும்.

முன்கூட்டியே திட்டமிடுவதன் மூலம் 90 விழுக்காட்டு வெப்பத்தாக்கப் பாதிப்புகளைத் தடுக்கமுடியும்.

முறையான வெப்பத் தடுப்புத் திட்டங்கள், காப்பீட்டு வசதிகள், தொழிலாளர்ப் பாதுகாப்புச் சீர்திருத்தங்கள் மூலமே பொருளியல் சரிவைத் தடுக்க முடியும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

குறிப்புச் சொற்கள்