ருத்ரபிரயாக்: கேதார்நாத் பகுதியில் ஏற்பட்ட கடும் நிலச்சரிவில் சிக்கிய ஆயிரக்கணக்கானோரை மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.
உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ளது கேதார்நாத். இங்குள்ள நான்கு கோவில்களுக்கு ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.
அந்த வகையில் கேதார்நாத் உள்ளிட்ட நான்கு கோவில்களுக்குப் பக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் ‘சார் தாம்’ யாத்திரை தற்போது விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ருத்ரபிரயாக் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களாகப் பலத்த மழை பெய்தது. இதனால் கேதார்நாத் கோவில் செல்லும் வழியில் உள்ள மலைப்பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
யாத்திரிகர்களால் தங்களுடைய புனித யாத்திரையைத் தொடர முடியவில்லை. மேலும் ஏற்கெனவே, கேதார்நாத் கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் அங்கிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்களும் பயண வழியில் சிக்கிக்கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த தேசிய-மாநிலப் பேரிடர் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு 10,000 பேரை பாதுகாப்பாக மீட்டனர். முதலில் சிறார்களும் முதியவர்களும் வெளியேற்றப்பட்டதாகவும் அதன்பின்னர் மற்றவர்களும் மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
“உத்தராகண்டின் ருத்ரபிரயாகில் உள்ள கேதார்நாத் கோவிலுக்குச் செல்லும் வழியில், முன்கட்டியா என்ற பகுதியில்தான் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிக்கொண்ட 10,450 யாத்ரீகர்களை கூட்டு மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக வெளியேற்றினர்,” அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்கட்டியா பகுதியில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (மே 19) நள்ளிரவில் சோன்பிரயாக், கௌரிகுண்ட் இடையேயான பாதையிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இடிபாடுகள் முக்கியமான நெடுஞ்சாலையை மறித்தன.
தொடர்புடைய செய்திகள்
தொடர்ச்சியான பாறைச்சரிவுகள், கனமழை, இருள், மலைப்பகுதி என பல்வேறு கடினமான சூழலை எதிர்த்து பக்தர்கள் ஒத்துழைத்ததாக கூட்டு மீட்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகள் அகற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து கேதார்நாத் பயணம் மீண்டும் துவங்கியது. யாத்திரிகர்களைப் பத்திரமாக மீட்ட படையினரைப் பல்வேறு தரப்பினர் பாராட்டி உள்ளனர்.
யாத்திரிகர்களைப் பத்திரமாக மீட்ட படையினரைப் பல்வேறு தரப்பினர் பாராட்டி உள்ளனர்.

