இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரம்: 10 பேர் பலி

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரம்: 10 பேர் பலி

2 mins read
வெள்ளக்காடான சாலைகள், போக்குவரத்து முடக்கம்
86340190-7e3f-4cb7-8204-f25f6bb41ca1
டெல்லியில் வியாழக்கிழமை கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக, தேசிய இதய நோய் மருத்துவமனை வளாகத்தில் இருந்த மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. - படம்: இந்துஸ்தான் டைம்ஸ்
multi-img1 of 2

புதுடெல்லி: நாடு முழுவதும் பெய்துவரும் கனமழை காரணமாகப் பல பகுதிகளில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வாகனவோட்டிகள் முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து செல்லும் காட்சிகளும் ஆமை வேகத்தில் நகரும் போக்குவரத்தும் ஆங்காங்கே காணப்படுகின்றன.

வியாழக்கிழமை பெய்த பலத்த பருவமழை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மழையினால் ஏற்பட்ட பல்வேறு விபத்துகளில் குறைந்தது 10 பேர் உயிரிழந்திருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை டெல்லியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பெய்த பலத்த மழை, தலைநகரின் காற்றுத் தரத்தை செப்டம்பர் 2023க்குப் பிறகு மிகத் தூய்மையான நிலைக்குக் கொண்டுவர உதவியுள்ளது.

இருப்பினும், இந்த மழையால் பல இடங்களில் கடுமையான வெள்ளப்பெருக்கு, மரங்கள் வேரோடு சாய்ந்தது, போக்குவரத்து நெரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன.

கிழக்கு டெல்லி, சங்கம விஹார், புதுடெல்லி ரயில் நிலையப் பகுதி, புராரி உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. ஐடிஓ, ரோஹ்தக் ரோடு, மெஹ்ராலி-பதர்பூர் ரோடு ஆகிய முக்கியச் சாலைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதற்கிடையே, ரோஹினியில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.

நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் ஆகிய இடங்களிலும் பரவலான வெள்ளப்பெருக்கும் போக்குவரத்து பாதிப்பும் பதிவாகின.

காசியாபாத்தின் வசுந்தரா பகுதியில், கட்டுமானப் பணி நடைபெறும் அடித்தளத்திற்கு அருகே திடீரென சாலை உள்வாங்கியது.

இதன் காரணமாக, அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரும் ஸ்கூட்டரும் பள்ளத்திற்குள் விழுந்தன. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

சூரத் மழை பாதிப்பு

சூரத் நகரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய வெள்ள நீர் வியாழக்கிழமை மெல்ல வடியத் தொடங்கியது. இருப்பினும், நகரில் மேலும் ஆறு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. கடந்த சில நாள்களில் மட்டும் மழையினால் ஏற்பட்ட விபத்துகளில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 7 பேர் பலி

உத்தரப்பிரதேசம் முழுவதும் வியாழக்கிழமை மழையினால் ஏற்பட்ட விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர்.

குஷிநகரில் இடி மின்னல் தாக்கியதில் 14 வயதுச் சிறுவன் ஒருவனும், சாந்த் கபீர் நகரில் நடந்த இரு வேறு சம்பவங்களில் இரண்டு பெண்களும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

புலந்த்ஷாரில் உள்ள குர்ஜாவின் முண்டாகேடா கிராமத்தில், தற்காலிகக் கூடாரங்களின் மீது சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர், நால்வர் காயமடைந்தனர்.

மேலும், ஷாம்லி மாவட்டத்தின் தானாபவன் நகரில் தகரக் கொட்டகையின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

கேரளாவில் கனமழை

கேரளாவின் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து மேலும் மூன்று உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, அங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்ததாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்