காவிரியில் கழிவுநீர்: ஒப்புக்கொண்ட கர்நாடக அமைச்சர்

காவிரியில் கழிவுநீர்: ஒப்புக்கொண்ட கர்நாடக அமைச்சர்

1 mins read
d7fa71f8-9016-4b7e-8f96-fa02de97bbc0
பெங்களூருவில் நாள்தோறும் வெளியேறும் மொத்தக் கழிவுநீரில் 53 விழுக்காட்டு நீர் மட்டுமே 37 மையங்கள் மூலம் சுத்திகரிக்கப்படுவதாக அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார். - கோப்புப் படம்: தி பயனீர்

பெங்களூரு: பெங்களூரு மாநகரின் ஏறக்குறைய 50 விழுக்காட்டுக் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் காவிரி, தென்பண்ணை ஆறுகளில் கலந்து தமிழகத்திற்குச் செல்கிறது என்பதைக் கர்நாடகச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

தமிழக அரசு தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தில் இதுதொடர்பாக தொடுத்துள்ள வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அமைச்சர் ராமலிங்க ரெட்டி வடிகால் வாரிய அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெங்களூருவில் நாள்தோறும் வெளியேறும் மொத்தக் கழிவுநீரில் 53 விழுக்காட்டு நீர் மட்டுமே 37 மையங்கள் மூலம் சுத்திகரிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

மீதமுள்ள 47 விழுக்காடு சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், ரிஷபவாதி ஆறு, பிற கால்வாய்கள் வழியாகச் சங்கமத்தை அடைந்து காவிரியிலும் தென்பண்ணை ஆற்றிலும் கலப்பதாக அவர் கூறினார்.

இதற்குத் தீர்வாக 43 புதிய சுத்திகரிப்பு மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் திரு ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

கர்நாடக அரசு கழிவுநீரை ஆறுகளில் கலந்து தமிழகத்திற்கு அனுப்புவதாக நீண்டகாலமாக விவசாய அமைப்புகளும் தமிழக அரசும் குற்றஞ்சாட்டி வந்த நிலையில், கர்நாடக அமைச்சரின் இந்த வெளிப்படையான ஒப்புதல் தென்மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்