கலபுரகி: காவல்நிலையத்தில் காவல்துறையினர் தூங்கியதைப் பயன்படுத்தி சிறார்க்குப் பாலியல் தீங்கிழைத்த குற்றவாளி ஒருவர் தப்பிவிட்டார்.
அந்தச் சம்பவம் கர்நாடக மாநிலத்தின் கலபுரகி மாவட்டத்தில் உள்ள அஃப்ஸல்பூர் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை (ஜூலை 2) அதிகாலை நிகழ்ந்தது.
ஒரு வாரத்திற்கு முன்பு, ‘போக்சோ’ எனப்படும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் மஞ்சுநாத் என்னும் 24 வயது ஆடவரைக் கைது செய்த காவல்துறையினர், ‘லாக்-அப்’பில் வைத்து விசாரித்து வந்தனர்.
வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் காவல்நிலையத்தில் இருந்தவர்கள் தூங்கினர். அதனைக் கண்ட அந்த ஆடவர், அங்கிருந்து தப்பித்தார்.
காவல்நிலையத்தின் இரண்டாவது மாடி அருகே இருந்த மரக்கிளை ஒன்றைப் பிடித்து இறங்கி அவர் தப்பி ஓடுவது அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
அவரைத் தேடும் பணிகள் கர்நாடகாவிலும் அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவிலும் நடைபெற்று வருவதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஃப்ஸல்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிராமம் ஒன்றைச் சேர்ந்த 16 வயது இளம்பெண்ணைக் காணவில்லை என்று அவரது பெற்றோர் புகார் தெரிவித்திருந்தனர்.
அந்தப் பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி மஞ்சுநாத் கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. தீவிரத் தேடலுக்குப் பின்னர் மகாராஷ்டிர மாநிலம் புனேயில் இளம்பெண்ணுடன் அந்த இளையர் ஒளிந்திருப்பதாகத் தகவல் கிடைத்தது.
சிறப்புக் காவல்துறை படை புனே சென்று மஞ்சுநாத்தைக் கைது செய்ததோடு இளம்பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தது.
கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்ட இளையர், காவல்துறையினரின் அலட்சியம் காரணமாகத் தப்பிவிட்டதாகக் கூறப்பட்டது.
இதற்கிடையே, காவல்நிலையத்தில் பணியாளர்கள் தூங்கியது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

