மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகளில் திங்கட்கிழமை (செப்டம்பர் 28) கடும் வீழ்ச்சி காணப்பட்டது.
வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,124 புள்ளிகள் (1.52%) சரிந்து 72,772 புள்ளிகளில் நிலைபெற்றது.
அதேபோல, தேசிய பங்குச் சந்தையின் (நிஃப்டி) குறியீடு 360 புள்ளிகள் (1.56%) வீழ்ச்சியடைந்து 22,780ஆக பதிவானது.
இந்த எதிர்பாராத சரிவின் எதிரொலியாக, ஒரே நாளில் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்குச் சுமார் ரூ.8.9 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பொருளியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சொத்துச் சந்தை, வங்கி, வாகனம் போன்ற முக்கியத் துறைகளின் பங்குகள் இரண்டு விழுக்காடு வரை சரிவைச் சந்தித்தன.
மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றத்தைத் தணிக்க ஈரானால் முன்வைக்கப்பட்ட ஏழு நாள் போர் நிறுத்தத் திட்டத்தை அமெரிக்கா நிராகரித்தது, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயரக் காரணமாக அமைந்துள்ளது.
மேலும், அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதால் அந்நாட்டுப் பத்திரங்கள் மீதான வருவாய் அதிகரித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
இதனிடையே, இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவைச் சந்தித்தது. செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) காலை ‘சென்செக்ஸ்’ 600 புள்ளிகளும் நிஃப்டி 180 புள்ளிகளும் குறைந்து, வர்த்தகம் நடைபெற்றது.
தொடர்ந்து ஏழு வாரங்களாகப் பங்குச் சந்தையில் நிலவி வரும் இந்த வீழ்ச்சியால், இந்திய சிறு முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் மத்தியில் பெரும் கவலை எழுந்துள்ளதாகத் துறைசார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
