சிம்லா: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியை அவருக்குச் சிகிச்சையளித்த மூத்த மருத்துவர் ஒருவர் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து அந்த மருத்துவரை மருத்துவமனை உடனடியாகப் பணியில் இருந்து நீக்கியதாக இந்திய ஊடகங்கள் புதன்கிழமை தெரிவித்தன.
இமாச்சலப் பிரதேச மாநில அரசு, இந்தச் சம்பவம் குறித்த ஆய்வுக்குப் பின் அந்த மருத்துவரைப் பணியில் இருந்து நீக்குவதற்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டிசம்பர் 22ஆம் தேதி நடந்த அந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட நோயாளி சிங், சிம்லா காவல்துறையில் மருத்துவர் ராகவ் நிருலா மீது புகார் கொடுத்தார். அதையடுத்து, காவல்துறை அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
அந்தப் புகாரின் அடிப்படையில், “நோயாளிகளைப் பார்க்க குறிப்பிட்ட நேரத்தில் சென்ற மருத்துவர் நிருலா, நோயாளி சிங்கிடம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது குறித்தும் அவரது மருத்துவ ஆவணங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார். ஆனால், மருத்துவரின் கேள்விகளுக்கு நோயாளியால் சரிவரப் பதிலளிக்க முடியவில்லை.
ஏனெனில், அப்போது அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. நோயாளியான சிங், சரிவரப் பதிலளிக்க முடியாததால் இருவரும் வாக்குவாதம் செய்ய நேரிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர் நிருலா, நோயாளி சிங்கை மிரட்டியதுடன் அவரை ஓங்கி முகத்தில் குத்தியதோடு உதைத்துத் தாக்கியிருக்கிறார். படுக்கையில் இருக்கும் நோயாளியால் எழுந்து அவரைத் தடுக்க முடியவில்லை. தன்மீது மேலும் அடி விழாமல் தற்காத்துக் கொண்டார். தாக்குதலில் சிங்கின் மூக்கில் இருந்தும் வாயிலிருந்தும் இரத்தம் வழிந்தது. தமக்குப் பொருத்தப்பட்டிருந்த சுவாசக்குழாய் உடைந்துபோனதாகவும் அதனால் தம் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாகவும் அந்தப் புகாரில் திரு சிங் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் நிருலா, நோயாளி சிங்கைத் தாக்கும் காட்சியை அங்கிருந்த சிங்கின் சகோதரர் காணொளியாகப் படம்பிடித்து சமூக ஊடகங்களில் பரவச் செய்துள்ளார். திரு சிங்கும் சிம்லா காவல்துறையை அழைத்து புகார் தெரிவித்துள்ளார்.
அதையடுத்து மருத்துவமனைக்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள் மருத்துவர் நிருலா மீதும், அவர் நோயாளியைத் தாக்கியபோது அவருக்கு உதவியதாக இன்னொரு மருத்துவர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்த விசாரணை தொடர்வதாக சிம்லா காவல்துறை அறிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், பாதிக்கப்பட்ட நோயாளியின் உறவினர்கள், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகுவைச் சந்தித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

