வயிற்றில் குண்டு பாய்ந்தும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்த ஓட்டுநர்

2 mins read
8878a5cd-fd57-4bcd-ae3d-e78e62cee184
வயிற்றில் பாய்ந்த குண்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. - மாதிரிப்படம்: ஊடகம்

பாட்னா: வயிற்றில் துப்பாக்கியால் சுடப்பட்டும் ஜீப் ஓட்டுநர் ஒருவர் மனந்தளராமல் துணிச்சலுடன் சில கிலோமீட்டர் தொலைவிற்கு வாகனத்தை ஓட்டிச் சென்று, அதிலிருந்த பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்த சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

போஜ்பூர் மாவட்டத்தில் இடம்பெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் சந்தோஷ் சிங் என்ற ஆடவர் தமது ஜீப்பில் 14-15 பேரை ஏற்றிக்கொண்டு திரும்பியதாகக் காவல்துறை சனிக்கிழமை (டிசம்பர் 7) தெரிவித்தது.

அப்போது, இரு மோட்டார்சைக்கிள்களில் சிலர் ஜீப்பை விரட்டியதாகவும் அவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் சிங்கின் வயிற்றில் குண்டு பாய்ந்ததாகவும் கூறப்பட்டது.

தாங்கமுடியாத அளவிற்கு வலி இருந்தபோதும் சிங் ஜீப்பை நிறுத்தாமல் ஓட்டிச் சென்று, பாதுகாப்பான இடத்தில் நிறுத்தியதாகக் காவல்துறை விளக்கியது.

பின்னர் ஜீப்பிலிருந்த பயணிகள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறை, சிங்கை அருகிலிருக்கும் ஆரா நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்த்தது.

இச்சம்பவம் கடந்த புதன்கிழமை இரவு நிகழ்ந்தது.

பின்னர், சிங்கின் உடலில் பாய்ந்திருந்த குண்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டார் என்றும் ஆனாலும் சில நாள்களுக்கு மருத்துவர்களது கண்காணிப்பின்கீழ் இருப்பார் என்றும் காவல்துறை உயரதிகாரி ராஜீவ் சந்திர சிங் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் சிங்கின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், குற்றவாளிகளைப் பிடிக்கும் பணியில் காவல்துறை இறங்கியுள்ளது. தடயவியல் வல்லுநர்களும் காவல்துறை விசாரணைக்கு உதவி வருகின்றனர்.

விசாரணையில், மோட்டார்சைக்கிளில் வந்தவர்கள் அதே நாளில் இன்னொரு வாகனத்திற்கும் குறிவைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்