தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஐந்தாண்டுகளில் 20 முறை இடிந்து விழுந்த சில்க்யாரா சுரங்கப்பாதை!

2 mins read
fa6f4f6f-06e8-4161-9964-5ef8f6e9cc3f
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் கட்டப்படும் வரும் 4.5 கிலோமீட்டர் நீள சில்க்யாரா சுரங்கப்பாதை. - படம்: ஏஎஃப்பி

டேராடூன்: அண்மையில் இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள சில்க்யாரா - பர்கோட் சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 41 ஊழியர்கள், 17 நாள்களுக்கு அதனுள்ளேயே சிக்கிக்கொள்ள நேர்ந்தது.

இந்நிலையில், அந்தச் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது இது முதன்முறையன்று என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இருவழிகளிலும் இரண்டு தடங்களைக் கொண்ட அந்த 4.5 கிலோமீட்டர் நீளச் சுரங்கப்பாதை, கடந்த ஐந்தாண்டுகளில் இதுபோன்று பல நிகழ்வுகளை எதிர்கொண்டுள்ளது.

அந்தச் சுரங்கப்பாதைக் கட்டுமானப் பணிகளின்போது சிறிய, நடுத்தர அளவில் இதுபோன்று 19-20 முறை ஆங்காங்கே இடிந்து விழுந்துள்ளது என்று தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர் அன்ஷு மணீஷ் கல்கோ கூறியதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அப்படி இடிந்து விழுவது இயல்புதான் எனக் குறிப்பிட்ட திரு அன்ஷு, “ஒவ்வொரு சுரங்கப்பாதைக் கட்டுமானத்தின்போதும் இப்படி நடப்பது வழக்கந்தான். ஆனால், இம்முறை ஊழியர்கள் உள்ளே சிக்கிக்கொண்டது நமது கெட்ட நேரம்,” என்றார்.

இந்த சில்க்யாரா - பர்க்யாட் சுரங்கப்பாதையில், இருபுறமும் இடிந்து விழுந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன என்றும் சில்க்யாராவைவிட, பர்கோட் பகுதியில்தான் அதிகமுறை இடிந்து விழுந்துள்ளது என்றும் அவர் சொன்னார்.

மேலும், சில்க்யாரா முனையில் 160 - 260 மீட்டர் தொலைவுப் பகுதி, உடைந்து விழும் பாறைகளைக் கொண்ட ‘சிவப்பு மண்டல’மாக அடையாளம் காணப்பட்டுள்ளது என்று அன்ஷு குறிப்பிட்டார்.

அதனால், அப்பகுதியை வலுப்படுத்த கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் அவர்.

அப்பகுதியின் சவால்மிக்க நில அமைப்பும் அங்கு குறிப்பிடத்தக்க அளவிற்குப் பாறைச் சிதைவு இருப்பதாலும் அந்தச் சுரங்கப்பாதை இப்படிப் பலமுறை இடிந்துவிழுந்துள்ளது என்று அதன் கட்டுமானத்துடன் தொடர்புடைய, பெயர் வெளியிட விரும்பாத இன்னோர் அதிகாரி கூறினார்.

குறிப்புச் சொற்கள்