புதுடெல்லி: ஏர் இந்தியா, அதன் விமானங்களின் பழுதுபார்ப்புப் பணிகளில் சிலவற்றை இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக தாங்களே மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது என்று தகவல் தெரிந்தவர்கள் கூறியுள்ளனர்.
அதற்குத் தங்கள் பங்குதாரர் நிறுவனமான சிங்கப்பூர் ஏர்லைன்சின் உதவியை ஏர் இந்தியா நாடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் புறப்படுவதற்கு முன்பு நடத்தப்படும் சோதனைகள், தினசரிச் சோதனைகள், சிறிய பழுதுபார்ப்புப் பணிகள், இதர சரிபார்ப்பு நடவடிக்கைகள் போன்றவை சம்பந்தப்பட்டவையாகும். இந்திய அரசாங்கத்துக்குச் சொந்தமான ஏஐஇஎஸ்எல் (AIESL) நிறுவனத்துக்குப் பதிலாக அப்பணிகளைத் தாங்களே மேற்கொள்ள ஏர் இந்தியா எண்ணம் கொண்டுள்ளதாக தகவல் தெரிந்தவர்கள் குறிப்பிட்டனர்.
இதுகுறித்து வெளிப்படையாகப் பேசத் தங்களுக்கு அனுமதி கிடையாது என்று அவர்கள் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட பழுதுபார்ப்புப் பணிகளை ஏர் இந்தியா ஊழியர்களிடம் ஒப்படைக்கும் நடைமுறைகளில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் உதவிக்கரம் நீட்டும் என்று அவர்கள் கூறினர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியாவில் 25.1 விழுக்காட்டுப் பங்குகளுக்கு உரிமை வகிக்கிறது.
ஏர் இந்தியாவில் குறிப்பிடத்தக்க அளவில் சிறுபான்மைப் பங்குகளை வைத்திருக்கும் நிறுவனம் என்ற முறையில் தங்களின் உருமாற்றப் பணிகளுக்குக் கைகொடுக்க சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், அதனுடன் இணைந்து செயல்படுகிறது. சிங்கப்பூர் ஏர்லைன்சின் பேச்சாளர் ஒருவர் மின்னஞ்சல்வழி இத்தகவலை வெளியிட்டார்.
கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி இந்தியாவின் அகமதாபாத் நகரில் ஏர் இந்தியா விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. அதனையடுத்து ஏர் இந்தியா கட்டங்கட்டமாக அதன் பழுதுபார்ப்புப் பணிகள் சிலவற்றை ஏஐஇஎஸ்எல் நிறுவனத்திடமிருந்து மாற்றுகிறது.
புதிய உரிமையாளரான டாடா குழுமத்தின்கீழ் உருமாறிக்கொண்டிருந்த வேளையில் AI171 விமானம் அகமதாபாத்தில் விழுந்து நொறுங்கியது. டாடா குழுமம், 2022ஆம் ஆண்டில் அதிக லாபம் ஈட்ட சிரமப்பட்ட ஏர் இந்தியாவை வாங்கியது.
தொடர்புடைய செய்திகள்
அகமதாபாத்தில் விழுந்து நொறுங்கிய ஏர் இந்தியா விமானத்தில் இருந்த 242 பேரில் ஒருவரைத் தவிர அனைவரும் உயிரிழந்தனர்.