கோல்கத்தா/பாட்னா: வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையின் (எஸ்ஐஆர்) கீழ் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அரசு நலத்திட்ட உதவிகளைப் பெற முடியாது என்று மேற்கு வங்க அரசு அறிவித்துள்ளது.
எனினும், எஸ்ஐஆர் நடவடிக்கையில் பெயர் நீக்கப்பட்டதற்கு எதிராக முறையீடு செய்தவர்களுக்கு, தீர்ப்புத் தெரியும்வரை நலத்திட்ட உதவி தொடரும். அதன் பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்கீழ் குடியுரிமை கோரி விண்ணப்பித்துள்ளவர்கள் அனைத்து அரசுத் திட்டங்களையும் பெறலாம். குடும்ப அட்டைகள் சரிபார்க்கப்படும்,” என்று மேற்கு வங்க உணவு வழங்கல் துறை அமைச்சர் அசோக் கீர்த்தனியா கூறினார்.
அதேபோல், பீகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள், மலிவு விலை விற்பனைப் பொருள்கள், பிற நலத்திட்டங்கள் உட்பட எந்தவொரு அரசு சலுகையையும் பெற முடியாது. இவர்களின் வங்கி கணக்குப் புத்தகங்களும் உரிய காலத்தில் நீக்கப்படும் என்று பீகார் முதல்வர் சாம்ராட் செளத்ரிஅறிவித்துள்ளார்.
மாநிலத்தில் எஸ்ஐஆர் நடவடிக்கைக்குப் பிறகு, குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கையில் ஏறக்குறைய 500,000 பேர் நீக்கப்பட்டுள்ளதாக பீகார் உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் அசோக் சௌத்ரி கூறினார்.

