புதுடெல்லி: பணமோசடி வழக்கில் பிணை நிபந்தனையைத் தளர்த்தக்கோரிய மணீஷ் சிசோடியாவின் மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
கலால் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்குகளில் முன்னாள் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் கைது செய்யப்பட்டு நிபந்தனை பிணையில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில், ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகளில் விசாரணை அதிகாரியிடம் திங்கள், வியாழன்தோறும் முன்னிலையாக வேண்டும் என்ற பிணையின் நிபந்தனையைத் தளர்த்தக்கோரி ஆம் ஆத்மி தலைவர் மனு அளித்திருந்தார். இந்த மனுவை நவம்பர் 22ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு சிசோடியாவின் விண்ணப்பங்கள் குறித்துப் பதிலளிக்குமாறு மத்தியப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ), அமலாக்க இயக்குநரகம் (ED) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
கடந்த ஆகஸ்ட் 9ல் உச்ச நீதிமன்றம் சிசோடியாவுக்குப் பிணை வழங்கியது. விசாரணையின்றி 17 மாதங்கள் சிறையில் அடைத்தது. மேலும் விசாரணை அதிகாரியிடம் திங்கள், வியாழக்கிழமைகளில் காலை 10-11 மணிக்குள் முன்னிலையாக வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்திருந்தது.
நவம்பர் 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, சிசோடியா சார்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் விசாரணை அதிகாரிகள் முன்பு 60 முறை முன்னிலையாகி உள்ளதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, சிசோடியாவின் பிணை நிபந்தனையை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இதுதொடர்பாக நீதிபதிகள் குழு அடுத்த தேதியில் பதிலளிக்கும் என்று கூறியுள்ளது.