காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் திங்கட்கிழமை இரவு நிகழ்ந்த விபத்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும் நால்வர் காயமடைந்தனர்.
பரூச் மாவட்டத்தில் இரவு 11 மணியளவில் தனியார் வேன் ஒன்றுடன் லாரி மோதியதில் வேனில் இருந்தவர்கள் உயிரிழந்தனர்.
வேதாச் கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் அந்த வேனில் பயணம் செய்தனர்.
இரவு 11 மணியளவில் பரூச் மாவட்டத்தின் மக்னாட் கிராமம் அருகே சென்றபோது வேன் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து தொடர்பான விவரங்களைச் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 19) காவல்துறை அதிகாரிகள் விளக்கினர்.
மேலும் அவர்கள் கூறுகையில், “மக்னாட் கிராமத்திற்கு அருகே சாலையின் இடது புறத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் வேன் மோதியது.
“விபத்தில் ஆறு பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். அவர்கள் ஜம்புசாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
“உயிரிழந்தோரில் 6 முதல் 16 வயது வரையிலான மூன்று குழந்தைகளும் அடங்குவர்,” என்று கூறினர்.
விபத்துக்குக் காரணம் என்ன என்பதை அறிய விசாரணை நடைபெறுவதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர்கள் சந்தியா ஜாதவ், விவேக் கோஹில், கீர்த்தி கோஹில், ஜெய்தேவ் கோஹில், சரஸ்வதி கோஹில், ஹன்சா ஜாதவ் ஆகிய 6 பேர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
நின்றுகொண்டு இருந்த வேன் மீது லாரி மோதியதாகக் கூறப்படுகிறது.