புதுடெல்லி: மத்திய கிழக்கில் நடந்துவரும் சண்டையில் இதுவரை ஆறு இந்தியர்கள் மாண்டுவிட்டனர் என்றும் ஒருவரைக் காணவில்லை என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
ஈரான்மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்த, பதிலுக்கு அந்நாடுகளை ஆதரிக்கும் வளைகுடா நாடுகள்மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால், அந்நாடுகளில் வசித்துவரும் வெளிநாட்டவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
“சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் மார்ச் 18ஆம் தேதி புதன்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார்,” என்று வெளியுறவுத் துறையின் கூடுதல் செயலாளர் (வளைகுடா) அசீம் ஆர். மகாஜன் தெரிவித்தார்.
ரியாத்திலுள்ள இந்தியத் தூதரகமும் அவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியது.
அவருடன் சேர்த்து, மத்திய கிழக்கில் நீடிக்கும் சண்டையால் இதுவரை ஆறு இந்தியர்கள் தங்கள் உயிரை இழந்துவிட்டனர். மேலும் ஒருவரைக் காணவில்லை.
“மாயமான இந்தியரைக் கண்டுபிடிக்க சவூதி அரேபியா, ஓமான், ஈராக், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள், சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளனர். மாண்ட இந்தியர்களின் உடல்களை கூடிய விரைவில் இந்தியாவிற்குக் கொண்டுவரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்று திரு மகாஜன் கூறினார்.
வெள்ளிக்கிழமை (மார்ச் 20) நடந்த அமைச்சுகள்நிலைக் கூட்டத்தின்போது அவர் இவ்விவரங்களை வெளியிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
மீட்பு நடவடிக்கைகளும் விமானப் போக்குவரத்தும்
வட்டாரப் போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் நிலைமை மேம்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. சண்டை தொடங்கிய பிப்ரவரி 28ஆம் தேதியிலிருந்து இதுவரை ஏறத்தாழ 300,000 பேர் வளைகுடாப் பகுதியிலிருந்து இந்தியாவிற்குத் திரும்பிவிட்டனர்.
“நிலைமை தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. அதனால், வளைகுடாப் பகுதியிலிருந்து கூடுதல் விமானங்கள் இயக்கப்படுகின்றன,” என்று திரு மகாஜன் கூறினார்.
வெள்ளிக்கிழமை மட்டும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிலிருந்து ஏறக்குறைய 60 விமானங்கள் இந்தியாவிற்குக் கிளம்பும் என எதிர்பார்க்கப்பட்டது.
போர்ப் பதற்றம் நீடித்துவரும் நிலையில் மத்திய கிழக்கில் பணியாற்றிவரும் மில்லியன்கணக்கான இந்திய ஊழியர்களின் பாதுகாப்பை அமைச்சு தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது.

