டெல்லி தீ விபத்தில் சிக்கியவர்களின் திகிலூட்டும் அனுபவம்

டெல்லி தீ விபத்தில் சிக்கியவர்களின் திகிலூட்டும் அனுபவம்

2 mins read
புகை சூழ்ந்த படிக்கட்டுகள், இரும்புக் கம்பிகள் பொருத்திய ‘பால்கனி’: நினைவுகூர்ந்த குடியிருப்பாளர்கள்
0d83b1d6-3e5b-4a3c-9181-13d2dccab84a
டெல்லியின் விவேக் விஹார் பகுதியில் ஒன்பது பேரின் உயிரைப் பலிவாங்கிய தீ விபத்திற்குப் பிறகு, உருக்குலைந்து காணப்படும் அந்த நான்கு மாடிக் குடியிருப்பின் தோற்றம். - படம்: ஏஎன்ஐ/ஹிந்துஸ்தான் டைம்ஸ்

புதுடெல்லி: டெல்லி ஷாக்தாரா பகுதியில் உள்ள விவேக் விஹாரில் ஞாயிற்றுக்கிழமை (மே 3) அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில், ஒரு பச்சிளம் குழந்தை உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

அதிகாலை 3:15 மணியளவில் மூண்ட தீ, கட்டடத்தின் இரண்டு, மூன்று, நான்காம் மாடிகளில் இருந்த குடியிருப்புகளுக்கு மின்னல் வேகத்தில் பரவியது.

படிக்கட்டுகளில் புகை சூழ்ந்திருந்த்தாலும் ‘பால்கனி’களில் இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்ததாலும் மக்கள் வெளியேற முடியாமல் கட்டடத்திற்குள்ளேயே சிக்கிக்கொண்டனர்.

ஏறத்தாழ ஐந்து மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகே தீயணைப்புத் துறையினரால் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர முடிந்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.

தப்பிக்க வழியில்லாமல் தவித்தனர்

கட்டடத்தின் முதல் மாடியில் வசிக்கும் மயங்க் என்பவர், “அக்கம்பக்கத்தினர் அலறியபடி வந்து எனது வீட்டு அழைப்பு மணியை விடாமல் அழுத்தியபோதுதான் நான் தூக்கத்திலிருந்து எழுந்தேன்.

“வீட்டின் பின்புறத்தில் பெரிதாகத் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. எப்படியோ சிரமப்பட்டு வீட்டைவிட்டு வெளியேறினேன்.

“ஆனால், படிக்கட்டுகள் முழுவதும் தீயால் சூழப்பட்டிருந்ததால் மற்றவர்களால் கீழே இறங்க முடியவில்லை.

“பால்கனிகளில் இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்ததால் அங்கிருந்தும் தப்பிக்க வழியில்லாமல் மக்கள் உள்ளேயே சிக்கிக்கொண்டனர்,” என்றார்.

மூன்றாவது மாடியில் வசிக்கும் சில்கி என்பவர் நூலிழையில் உயிர் தப்பிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“தீயணைப்புத் துறையினர் வந்து ‘ஸ்கை-லிப்ட்’ மூலம் எங்களை மீட்கும் வரை நீண்ட நேரம் பால்கனியிலேயே தவித்துக்கொண்டிருந்தோம்.

“தீ எங்கள் வரவேற்பு அறை வரை பரவி, இருக்கைகள் எரியத் தொடங்கின. இன்னும் ஐந்து நிமிடம் தாமதமாகியிருந்தால் நாங்கள் கருகியிருப்போம்,” என அவர் நடுக்கத்துடன் தெரிவித்தார்.

மற்றொரு குடியிருப்பாளரான ருச்சி அரோரா, தானும் தனது குடும்பத்தினரும் ஒன்றரை மணி நேரம் கட்டடத்திற்குள் உயிருக்குப் போராடிய நிலையில், தீயணைப்புத் துறையினரால் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்ததால் பலர் மீட்கப்பட்டாலும், ஒன்பது உயிர்களைப் பலிவாங்கிய இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்