தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புகைப்பதால் ஆண்டிற்கு 1.35 மில்லியன் இந்தியர்கள் உயிரிழப்பு

2 mins read
1279b39b-bdab-4bca-8cf9-4648cfd5df70
இந்தியாவில் ஆண்டுதோறும் புகையிலை சார்ந்த நோய்களுக்காக ரூ.1.77 லட்சம் கோடி செலவிடப்படுவதாகச் சொல்லப்படுகிறது. - படம்: ஏஎஃப்பி

புதுடெல்லி: புகையிலையால் ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் 1.35 மில்லியன் பேர் இறப்பதாகத் தெரியவந்துள்ளது.

புகைப்பழக்கத்திற்கு எதிராகப் பரவலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம்பெற்றாலும் அப்பழக்கத்தைக் கைவிடுவோர் விகிதமும் குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் ஆண்டுதோறும் புகையிலை சார்ந்த நோய்களுக்காக ரூ.1.77 லட்சம் கோடி (S$26.18 பில்லியன்) செலவிடப்படுவதாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், புகையற்ற நிக்கோட்டின் மாற்றுப்பொருள்கள் உள்ளிட்ட புதுமையான, அறிவியல் சான்றுடன்கூடிய தீங்கு குறைந்த உத்திகளைக் கையாள வேண்டும் என்று சுகாதார வல்லுநர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதயம் சார்ந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் தவிர்க்கும் ஒவ்வொரு சிகரெட்டும் பயன்தரும் என்கிறார் டெல்லி பிஎல்கே-மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நுரையீரல் மருத்துவ ஆலோசகர் பவன் குப்தா.

“புகைபிடிப்பதைவிட புகையில்லா நிக்கோட்டின் பயன்படுத்துவது குறைந்த ஆபத்தை விளைவிக்கும் என்றும் லண்டன் ராயல் மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கூறுகின்றனர். அவர்கள் முன்வைக்கும் சான்றைப் புறந்தள்ளிவிட முடியாது,” என்கிறார் டாக்டர் குப்தா.

கீல் (Tar) அகற்றப்படுவதாலும் எரியாது என்பதாலும் புகையற்ற நிக்கோட்டின் மாற்றுப்பொருள்கள் 95 விழுக்காடுவரை குறைந்த தீங்குடையது என்று இங்கிலாந்துப் பொதுச் சுகாதார அமைச்சு மதிப்பிட்டுள்ளாது.

உலகளவில் தற்போது சிகரெட்டிற்குப் பதிலாக மெல்லும் நிக்கோட்டின் பைகள் பரவலாகத் தொடங்கியுள்ளன. சுவீடன், நார்வே, அமெரிக்கா, டென்மார்க் உள்ளிட்ட 34 நாடுகளில் அத்தகைய தயாரிப்புகள் சந்தையில் கிடைக்கின்றன.

“புகையில்லை, கீல் இல்லை, எரிவதில்லை - இவைதான் முக்கிய வேறுபாடுகள். அறிவியல் சொல்வதால், பாதுகாப்பான நிக்கோட்டின் குறித்து நாம் சிந்திக்க வேண்டிய நேரமிது,” என்கிறார் எய்ம்ஸ்-கேப்ஃபர்ம்ஸ் நிலைய மருத்துவரும் உதவிப் பேராசிரியருமான டாக்டர் சுனைனா சோனி.

நிக்கோட்டின் பைகளால் அறவே ஆபத்து இல்லையெனச் சொல்ல முடியாது என்றாலும் இவ்வாண்டிற்குள் புகையிலைப் பயன்பாட்டை 30 விழுக்காடுவரை குறைக்க வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை எட்டுவதில் அது அர்த்தமுள்ள பங்களிப்பை அளிக்கும் என்று டாக்டர் சுனைனா கூறினார்.

இந்தியாவில் புகையிலை சார்ந்த நோய்களால் பத்துப் பேரில் ஒருவர் முன்னதாகவே இறந்துவிடுவதாகச் சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில், இந்தியாவில் ஏழு விழுக்காட்டினர் மட்டுமே வேறு உதவிகளின்றி புகைப்பழக்கத்திலிருந்து விடுபடுவதாக அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு, தடுப்பு மையம் தெரிவிக்கிறது.

குறிப்புச் சொற்கள்