சிங்கப்பூருக்குக் கடற்குதிரைகளைக் கடத்த முயற்சி; தமிழ்நாட்டைச் சேர்ந்த மூவர் கைது

1 mins read
d9b689dd-0972-43da-8aac-45ecafcccf57
மாதிரிப்படம்: - பிக்சாபே

பெங்களூரு: பெங்களூரு அனைத்துலக விமான நிலையம் வழியாக உலர வைக்கப்பட்ட கடற்குதிரைகளைக் கடத்த முயன்ற மூன்று பயணிகளைச் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்தனர்.

அம்மூவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 6,626 உலர் கடற்குதிரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

“ரகசியத் தகவலின் அடிப்படையில், கெம்கவுடா விமான நிலைய முனையம் ஒன்றில், அந்தச் சந்தேகப் பேர்வழிகள் மூவரும் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் மும்பை வழியாகச் சிங்கப்பூர் செல்லத் திட்டமிட்டிருந்தனர்,” என்று வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அண்மைக்காலத்தில் உலர் கடற்குதிரைகள் பிடிபட்ட சம்பவங்களில் இதுவே ஆகப் பெரியது எனக் கூறப்பட்டது.

இதனிடையே, இந்தக் கடத்தல் முயற்சியின் மூளையாகச் செயல்பட்டவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்துவிட்டதாகவும் வருவாய்ப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது.

“கடற்குதிரைகளை வாங்கி சிங்கப்பூருக்கு அனுப்புவதில் அந்த நபர்தான் முக்கியமானவர். இந்தியாவிலிருந்து தென்கிழக்காசிய நாடுகளுக்குக் கடற்குதிரைகளைக் கடத்தும் பெரிய கும்பலைப் பிடிக்க அதிகாரிகள் முயன்று வருகின்றனர்,” என்று அந்த அதிகாரி கூறினார்.

பாரம்பரிய சீன மருத்துவத்தில் கடற்குதிரை பெரிய அளவில் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்