பங்ளாதே‌ஷ் எல்லையில் பாம்புகள், முதலைகள்; இந்தியா யோசனை

பங்ளாதே‌ஷ் எல்லையில் பாம்புகள், முதலைகள்; இந்தியா யோசனை

1 mins read
பாதுகாப்புப் படையினருக்குச் சவாலாக இருக்கும் எல்லைப் பகுதிகளில் பயன்படுத்த பரிந்துரை
9c74620b-24e9-4782-8714-5759e50eab6b
இந்தியா - பங்ளாதே‌ஷ் இடையிலான எல்லைப் பகுதி 4,096 கிலோமீட்டர் நீளம் கொண்டது.  - படம்: இந்தியா டுடே

புதுடெல்லி: இந்தியாவுக்குள் ஊடுருவ முயல்வோரைத் தடுக்க பங்ளாதே‌ஷ் எல்லையில் பாம்புகளையும் முதலைகளையும் பயன்படுத்த எல்லைப் பாதுகாப்புப் படையின் ஒரு பிரிவினர் பரிந்துரைத்துள்ளனர்.

இந்தியா-பங்ளாதே‌ஷ் எல்லைப் பகுதிகள் பல ஆறுகளாலும் சதுப்பு நிலக் காடுகளாலும் சூழப்பட்டுள்ளன. அவற்றில் பாம்புகளையும் முதலைகளையும் விடுவதன்மூலம் சட்டவிரோதக் குடியேறிகள் அப்பகுதிகள்வழி இந்தியாவுக்குள் நுழையமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், பாம்புகள், முதலைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது என்றும் ஆயினும் அவற்றைப் பயன்படுத்துவது தொடர்பாக உத்தரவு ஏதும் வழங்கப்படவில்லை என்றும் விவரம் அறிந்தவர்கள் இந்திய ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

பங்ளாதே‌ஷ் உடனான 4,096 கிலோமீட்டர் நீளம் கொண்ட எல்லையை இந்தியாவால் வேலிகள் கொண்டு காக்க முடியாது என்றும் அதனைத் தொடர்ந்து கண்காணிப்பது சிரமமானது என்றும் கூறப்படுகிறது

இருநாடுகளுக்கு இடையிலான எல்லையில் கிட்டத்தட்ட 175 கிலோமீட்டருக்கு ஆறுகளும் சதுப்பு நிலங்களும் உள்ளன.

அவற்றின் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைவது, கடத்தல் உள்ளிட்டவை நடக்கின்றன. அப்பகுதிகளில் பாதுகாப்புப் படை வீரர்களைப் பணியமர்த்துவது கடினமான ஒன்று எனச் சொல்லப்படுகிறது.

அதனால், ஆறுகளிலும் சதுப்புநிலங்களிலும் பாம்புகளையும் முதலைகளையும் விடுவதன்மூலம் அச்சுறுத்தல்கள் குறையலாம் என்று ஒருசாரார் கூறுகின்றனர்.

குறிப்புச் சொற்கள்