இரு பயணிகளின் சண்டையைத் தவறாகச் சித்திரிக்கும் சமூக ஊடகம்: விமானி விளக்கம்

1 mins read
e00d4a46-185a-4467-8cc1-ffe40a98fec8
தாக்குதலில் ஈடுபட்ட வீரேந்தர் செஜ்வால் (இடது), பாதிக்கப்பட்ட அங்கித் திவான். - படங்கள்: தினமணி

புதுடெல்லி: பயணி ஒருவரை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானி தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விமானி சார்பில் அவரது வழக்கறிஞர் அறிக்கை ஒன்றைத் திங்கட்கிழமை (டிசம்பர் 22) வெளியிட்டுள்ளார்.

அதில், “இரு பயணிகளுக்கு இடையே நடந்த கைகலப்பை விமானிக்கும் பயணிக்கும் இடையே நடந்ததாக தவறாக சித்திரிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. பணியின்போது எந்தவொரு சண்டையிலும் அவர் ஈடுபடவில்லை. அவரது தொழில்முறைக்கும் அச்சம்பவத்திற்கும் எவ்வித தொடர்புமில்லை. இது முற்றிலும் தனிப்பட்ட விவகாரம்,” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தாக்குதல் சம்பவம் பற்றி விசாரிக்கக் குழு ஒன்று அமைக்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

புதுடெல்லி விமான நிலையத்தின் ஒன்றாம் முனையத்தில் வரிசையில் நிற்பது தொடர்பில் டிசம்பர் 19ஆம் தேதி, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் விமானியாக இருக்கும் வீரேந்தர் செஜ்வாலுக்கும் அங்கித் திவான் என்பவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

சம்பவம் நடந்தபோது வீரேந்தர் பணி நேரத்தில் இல்லை எனக் கூறப்பட்டது.

தாக்குதலில் காயமடைந்த அங்கித் திவான், தனது முகத்தில் ரத்தம் வழிந்த நிலையில் உள்ள புகைப்படங்களையும் தன்னை தாக்கிய வீரேந்தர் செஜ்வாலின் புகைப்படத்தையும் சமூக ஊடகத்தில் பகிர்ந்தார்.

இதனால், இணையத்தில் அச்சம்பவம் பேசு பொருளானது மட்டுமன்றி, வீரேந்தரின் செயலுக்குப் பலர் கடும் கண்டனமும் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்